தங்க பதக்கம் பெற்ற பிரியதர்சினி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி | Kalvimalar - News

தங்க பதக்கம் பெற்ற பிரியதர்சினி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

எழுத்தின் அளவு :

மேட்டுப்பாளையம்: அண்ணா பல்கலையில், இ.சி.இ., பிரிவில் தங்கப் பதக்கம் பெற்ற, காரமடையைச் சேர்ந்த மாணவி ரோகிணி பிரியதர்சினி, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். இவர், இந்திய அளவில் 243வது இடத்தைப் பெற்றுள்ளார்.

காரமடை கெம்பே கவுடர் காலனியில் வசிப்பவர் பழனிசாமி; மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி ஜோதிமணி, திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர்களது மூத்த மகள் ரோகிணி பிரியதர்சினி. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் பி.இ., இ.சி.இ., படித்தார். அண்ணா பல்கலையில், தமிழக அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

ரோகிணி பிரியதர்சினி கூறியதாவது: மக்களுக்கு சேவை செய்யும் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம், என்னிடையே எழுந்தது. டில்லியில் உள்ள வாஜ்ரம் நிலையத்தில் ஓராண்டும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகடமியில் ஓராண்டும் பயிற்சி வகுப்பு படித்தேன். இந்த இரண்டு ஆண்டும், நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற முடியவில்லை.

சென்னையிலும், தொடர்ந்து கோவை மாநகராட்சி மற்றும் அரசு கலைக் கல்லூரி சார்பில் இலவசமாக நடத்தும் உயர்கல்வி பயிற்சி மையத்திலும் சேர்ந்து, மூன்றாவது ஆண்டாக படித்தேன். பயிற்சி இயக்குனர் கனகராஜ், நல்ல முறையில் பயிற்சி அளித்தார். மூன்றாவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். அதில், எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று, இந்திய அளவில் 243வது இடத்தைப் பிடித்தேன். இவ்வாறு ரோகிணி பிரியதர்சினி கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us