நிலையான வளர்ச்சியை நோக்கி... | Kalvimalar - News

நிலையான வளர்ச்சியை நோக்கி...மே 31,2022,11:23 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1960களில் தேசிய நாடகப் பள்ளியின் ஆரம்ப காலக்கட்டங்களில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டதிலும் சரி, சரியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும் சரி அப்போதைய சமுதாயத்திற்கான தேவையை நிவர்த்தி செய்யும் பணியை திறம்பட செய்தது. மிக வலுவான நோக்கத்துடன் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அதனை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வந்துள்ளது.



இக்கல்வி நிறுவனத்தின் பெயர் சர்வதேச அளவில் புகழ் அடைந்துள்ளது. இங்கு படித்தவர்கள், சினிமா, நாடகம் மற்றும் கலைத்துறைகளில் உயர்ந்த இடங்களை பிடித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதலுக்கு ஏற்ப இக்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. 



பழைமையை பாராட்டி வந்தால் மட்டும் போதாது; நிலையான தொடர் வளர்ச்சியை பெற வேண்டியதும் அவசியம். அதற்கு, பாடத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவ்வப்போது தேவையான மாற்றங்கள் புகுத்தப்பட வேண்டும்.



பிரகாசமான எதிர்காலத்தை பெறும் வகையிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். முறையான நிர்வாகத்தை அமைக்க வேண்டும். ஒரு தனி நபர் சார்ந்த நிறுவனமாக அல்லாமல், முறைசார்ந்த நிறுவனமாக அனுபவம் வாய்ந்த குழுவால் நிர்வகிக்கப்படும் நிறுவனமாக செயல்படுவதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, திறமையான மற்றும் தேவையான மனிதவளத்துடன் கைகோர்க்க வேண்டும். 



ஆராய்ச்சியில் ஆர்வம்



கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு பிரதான அம்சம் ஒரு கல்வி நிறுவனம் ஆராய்ச்சியில் ஈடுபடுவது... ஆனால், இந்நிறுவனம் இன்னும் டிப்ளமா படிப்புகளை மட்டுமே வழங்கிவருகிறது. முதல்கட்டமாக, பல்கலைக்கழகத்திற்கு நிகரான அங்கீகாரத்துடன் பட்டப்படிப்புகள் வழங்கப்படும். இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் பல்வேறு துறைகளிலும் ஆர்வம் செலுத்தப்படும். 



நாடு முழுவதும் கிளைகளை ஏற்படுத்துவது மட்டும் போதாது. கால மாற்றத்திற்கு ஏற்ப, புதுப்புது அம்சங்களை கிரகித்துக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் விரிவான மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். 



ஒரு மத்திய அரசின் கல்வி நிறுவனமாக அரசிற்கும், மக்களுக்கும் பதிலளிக்கக்கூடிய கடமை உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஏராளமான சவால்கள் கண் முன் இருக்கின்றன. எனினும், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு முறையான அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் எத்தகைய சவால்களுக்கும் தீர்வு காண முடியும். 



ஆயிரக்கணக்கான மணிநேர நாடகங்கள் வெறுமனே வீடியோ பதிவாக மட்டும் உள்ளன. அவற்றை முறைப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, தேவையான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 




-டாக்டர் ரமேஷ் சந்த்ரா கவுர், இயக்குனர், நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா, டெல்லி.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us