மூளையும், தேர்வு கால உணவு முறையும்! | Kalvimalar - News

மூளையும், தேர்வு கால உணவு முறையும்!பிப்ரவரி 20,2023,12:30 IST

எழுத்தின் அளவு :

உங்களுடைய திறமையின் அச்சாரமே உங்கள் மூளைதான். அது சீராக செயல்பட்டால் அதனுடைய ஆற்றல் பிரமிக்கத்தக்கது. ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு அது சீராக செயல்படுவதில்லை. 



ஆகவேதான் கவனக்குறைவு, படிப்பது நினைவில் நிற்பது இல்லை. படிக்கவே தோன்றுவது இல்லை அல்லது அதில் நாட்டம் இல்லை. வீடியோ கேமில் வரும் உற்சாகம் படிப்பில் வருவது இல்லை போன்ற குறைபாடுகள். அதனை சொல்லியும் குற்றம் இல்லை. நீங்கள் ஒரு கம்ப்யூட்டர், அல்லது கார் வாங்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவற்றோடு கூட அதை எப்படி இயக்க வேண்டும் என்ற சின்ன புத்தகத்தை கொடுப்பார்கள். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அதில் தெளிவாக எழுதி வைத்திருக்கும். 



அனால் நீங்கள் பிறந்தபோது உங்களோடு சேர்ந்து உங்கள் மூளையை எப்படி இயக்குவது என்று ஒரு சின்ன புத்தகமும் சேர்ந்து பிறந்ததா என்ன? இல்லையே. அந்த குறையை நிவர்த்தி செய்வதற்கு இப்போதைய அறிவியல் நம் மூளையை பற்றிய பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் கண்டறிந்து இருக்கின்றது. அவற்றை ஒவ்வொன்றாய் பார்ப்போம்.



இந்த மூளையை சீராக இயக்க மட்டும் கற்றுக் கொண்டால் ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு அசகாய சக்தி பிறந்து அவர்களை எதையும் சாதிக்க வைக்கும். இத்தகு ஆற்றல் மிகுந்த மூளையை இயக்க கற்றுக்கொள்வது எப்படி என்பது ஓரிரு நாட்களுக்குள் நடைபெறும் பணி அல்ல. அது ஒரு கடல். ஞாபக மறதி, கவனமின்மை, நாட்டமின்மை இவை எல்லாமே பொய்களாகி, மகா மக்கு மாணவர்களுக்கு கூட இந்தக் கலையை இந்த பக்கங்களுக்குள் அடக்கி கற்று தந்துவிட முடியாது.



முதலாவதாக இந்த மூளை இயங்கும் இடம் நம்முடைய உடல். அதனை ஒழுங்காக பராமரிப்பதன் மூலம் நாம் நம் மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு வழி வகுக்கலாம். தேர்வுக்கென்று நீங்கள் தயாராகும் சமயத்தில் உங்கள் மூளையை இப்போதிருந்தே நீங்கள் பராமரிப்பது அவசியம். உங்கள் உணவில் உங்கள் மூளைக்கு ஏற்ற ஊட்ட சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.



தேர்வு காலத்தில் ஐந்து அத்தியாவசிய உணவுகள்:




1. அன்றாடம் முளை கட்டிய தானியங்கள் ஒரு கப் 


2. பசலைக் கீரை பொரியல், சூப், குழம்பு என எதோ ஒரு வடிவத்தில்


3. வாழைத்தண்டு - ஒரு கிண்ணம் - கூட்டு / ஜூஸ்


4. உலர்ந்த பழங்கள் - பாதாம், பேரிச்சை, திராட்சை


5. பச்சை காய்கறிகள், பழங்கள்



அப்படியே அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்:



1. சீஸ்: இது செரிமானத்திற்கு கஷ்டமான உணவு, தேர்வு சமயத்தில் தவிர்ப்பது நல்லது.


2. காபி / டி: இது கண் விழித்து படிப்பதற்கு உதவும் என்று அதிக மாணவர்கள் குடிக்கும் விஷயம். அனால் இது இயல்பான தூக்க நிலையை கெடுப்பதுடன் தூங்கும் வேளையில் கூட மூளைக்கு தேவையான ஓய்வை தராது. இதற்கு பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை சூடாக குடிக்கலாம்.


3. சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் (மைதா, வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, அதிகமான இனிப்புகள்) : ஜீரணத்திற்கு பாதகம் விளைவிக்கும் என்பதினால், இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டாம் என்றாலும், கூடிய மட்டும் குறைத்துக் கொள்ளலாம்.


4. கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனிகள்.



இவற்றோடு சேர்ந்து அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கம். இது உங்களுடைய உடலையும் அதற்குள் இயங்கும் மூளையையும் சிறந்த நிலையில் வைத்திருக்க உதவும். துருப்பிடித்த சைக்கிள் அதுவே எண்ணெய் விட்டால் எவ்வளவு அருமையாக ஓடுகிறது இல்லையா? அதே போல் உங்கள் மூளை சீராக இயங்க மிகவும் தேவையான சமாச்சாரங்கள் இவை.



இன்று முதல் இவற்றை ஒவ்வொரு நாளும் பின்பற்றுங்கள். தேர்வு நேரத்தில் களைப்படையாமல் எழுத, சமயோசிதமாக செயல்பட என்று அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும். இவை உடலளவில் அவசியம். அனால் இதே மூளையை படிக்க பயன்படுத்தும் போது இன்னும் சில விஷயங்களை நீங்கள் கடைபிடித்தால் அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us