கல்வி கடன் பெற என்ன வழி? | Kalvimalar - News

கல்வி கடன் பெற என்ன வழி?ஏப்ரல் 22,2023,14:17 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அடுத்து கல்லுாரியில் சேர்க்கும் போதே அதற்கான கட்டணங்கள், செலவுக்கு என்ன செய்வதென பெற்றோர் கவலைப்படுவர். அவர்களின் கவலையை போக்க, மத்திய அரசின் சார்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதற்காக, 'வித்யாலட்சுமி' என்ற பெயரிலான தனி இணையதளம் செயல்படுகிறது. அதில், ஆன்லைனில் விண்ணப்பித்து கடன் பெறலாம்.



கல்லுாரிகளின் அட்மிஷன் பெற்ற பிறகே கடன் வழங்கப்படும். அனைத்து அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கும் கடன் உண்டு. சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், கல்லுாரி வாகன கட்டணம், 'லேப்டாப்' வாங்கும் செலவு போன்ற அனைத்தும், கல்வி கடனாக கிடைக்கும்.



நான்கு லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, எந்த காப்பு ஆவணங்களும் தேவை இல்லை; 7.5 லட்சம் ரூபாய் வரை, பெற்றோரின் உறுதிமொழி பத்திரம் தேவை. அதற்கு மேல், பிணைய ஆவணங்கள் வேண்டும்.



கல்வி கடன்கள் சராசரியாக, 10 சதவீத வட்டியுடன் வழங்கப்படும். படிப்பு காலம் மற்றும் கூடுதல் ஓராண்டு வரை கடன் செலுத்த அவகாசம் உண்டு. அதற்குள் வேலைக்கு சென்று, கடன் தவணையை செலுத்தலாம்.



பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாணவர்களுக்கான பான் கார்டு, கல்லுாரி செலவு பட்டியல், மாணவரின் இரண்டு புகைப்படங்கள், பெற்றோரின் முகவரி ஆவணம், ஆறு மாத வங்கி பரிவர்த்தனை பட்டியல், வருமான வரி செலுத்திய அறிக்கைகள், கல்வி கடன் வாங்க சமர்ப்பிக்க வேண்டும்.



கல்வி கடன் வட்டியில் மாணவியருக்கு சலுகை உண்டு. ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் வருவாய்க்கு குறைவானவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை இணையதளத்திலும், வங்கிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us