புல்பிரைட் நேரு உதவித்தொகைகள் | Kalvimalar - News

புல்பிரைட் நேரு உதவித்தொகைகள்ஜூன் 13,2023,12:28 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவை சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உதவித்தொகையுடன் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.



இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே, பரஸ்பர கல்வி மற்றும் ஆராய்ச்சி பகிர்தலை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க இந்தியா கல்வி அறக்கட்டளை - யு.எஸ்.ஐ.இ.எப்., புல்பிரைட் நேரு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது. 



துறைகள்: மெட்டீரியல் சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ், சைபர் செக்யூரிட்டி, வேளாண்மை, வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், பொருளாதாரம், கணிதம், சர்வதேச சட்டக் கல்வி, நரம்பியல், கல்வி கொள்கை மற்றும் திட்டமிடல், வரலாறு, மானுடவியல், பெண்கள் ஆய்வு மற்றும் பாலின ஆய்வு, பொது கொள்கை, பொது சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகள்.



புல்பிரைட்-நேரு டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்:


இத்திட்டத்தில் பிஎச்.டி., படித்துக்கொண்டிருக்கும் சிறந்த ஆராய்ச்சி மாணவர்கள், அமெரிக்காவில் 6-9 மாதங்கள் வரை ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.



தகுதிகள்: துறை சார்ந்த பிரிவில் போதிய ஆராய்ச்சி அனுபவம். ஏதேனும் ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் நவம்பர் 2, 2022 தேதிக்கு முன்பு பிஎச்.டி., சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.



உதவித்தொகை: விசா கட்டணம், கல்விக் கட்டணம், விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற செலவுகள் அடங்கும்.




புல்பிரைட்-நேரு போஸ்ட் டாக்டோரல் ரீசர்ச் பெலோஷிப்:


இந்தியாவை சேர்ந்த பிஎச்.டி., அல்லது டி.எம்., பட்டம் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகையுடன் கூடிய பிரத்யேக கல்வி திட்டம்.



தகுதிகள்: கடந்த 4 ஆண்டுகளுக்குள், பிஎச்.டி., அல்லது டி.எம்., நிறைவு செய்தவர்கள் அல்லது நிறைவு செய்ய உள்ளவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.



உதவித்தொகை: தேர்வு செய்யும் பாடத் துறைகளுக்கு ஏற்ப 8 முதல் 24 மாதங்கள் வரை கல்விக் கட்டணம், விமான பயணக் கட்டணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். மேலும், மாத ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.




புல்பிரைட்-நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்:


ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக உதவித்தொகை திட்டம்



தகுதிகள்: ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். துறை சார்ந்த நிபுணர்கள் குறைந்தது முதுநிலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



உதவித்தொகை: சர்வதேச விமான பயணம், மாதாந்திர செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும்.



கால அளவு: தேர்வு செய்யும் துறைக்கு ஏற்ப 4 முதல் 9 மாதங்கள் வரை.




புல்பிரைட்-நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்:


இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் அமெரிக்க உயர்கல்வி முறை குறித்து அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் இரண்டு வார காலம் அமெரிக்க பயணம் மேற்கொள்ளலாம். 



அமெரிக்க கல்வி நிறுவனங்களின் வகைகள், அங்கீகார நடைமுறை, பாடத்திட்ட மேம்பாடு, நிதி மேம்படுத்தும் முறை, சர்வதேச கல்வி மற்றும் மாணவர் சேவை குறித்த அறிவை பெறுவதோடு, இந்திய கல்வி முறை குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.



தகுதிகள்: இந்தியாவில் உள்ள கல்லூரி கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் செயல்படும் சர்வதேச கல்வி மேம்பாடு மற்றும் மேலாண்மை பிரிவில், குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்கள்,  இயக்குநர்கள், பதிவாளர்கள், அயல்நாட்டு கல்வி ஆலோசகர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.



உதவித்தொகை: ஜே-1 விசா, சர்வதேச விமான பயணக்கட்டணம், தங்கும் விடுதி செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை: புல்பிரைட்-நேரு அனைத்து உதவித்தொகைகளுக்கும் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: www.usief.org.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us