வகுப்பறைகள் ஆய்வுக்கூடமாக வேண்டும்! | Kalvimalar - News

வகுப்பறைகள் ஆய்வுக்கூடமாக வேண்டும்!ஜூன் 19,2023,16:48 IST

எழுத்தின் அளவு :

நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒரே மாதிரியான கல்வி கற்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. காலம் காலமாக இன்றும் அதே வகுப்பறை சூழல் தொடர்கிறது.

இதுநாள் வரை கல்வி என்பது தகவல் சார்ந்து இருந்தது. மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை வழங்குவதற்கே வகுப்பறைகளில் ஆசிரியர்கள் முக்கியத்துவம் அளித்தனர். தற்போது, ஆசிரியர்களை விட அதிக தகவல்களை வழங்கும் நவீன தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இத்தகைய சூழலில், கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பள்ளி அல்ல கல்லூரி

நமது கல்விமுறை மிக வேகமாக மாற வேண்டும். உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. சரியான பாதையை நோக்கி செயல்பட இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மிக வேகமாக மாறினால் மட்டுமே இளைஞர்கள் நமது நாட்டிற்கு சொத்தாக மாறுவார்கள். அவ்வாறு மாறவிட்டால், அவர்களே மிகப்பெரிய சவாலாக விளங்கும் அபாயமும் உண்டு. கல்வியாளர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இது குறித்து தீவிரமாக ஆலோசித்து, உரிய முயற்சி எடுத்து வருகிறார்கள் என்றே நம்புகிறேன்.

கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது என்பது மிக அவசியமானது. நம் நாட்டில் இன்னும் சில உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு பள்ளியை போல செயல்படுவகின்றன. அது சரியான அணுகுமுறை இல்லை. ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கிலும், வேலைவாய்ப்பை மட்டுமே பெற்றுத்தரும் நோக்கிலும், கல்வி நிறுவனங்கள் இனியும் செயல்படக்கூடாது.

டிசைன் திங்கிங்

நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பிரச்சனையை எப்படி கண்டறிவது, எப்படி புதுமையாக சிந்திப்பது, நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் அதற்கு எப்படி தீர்வு காண்பது, போன்றவற்றை வளர்க்கும் இடமாகவே கல்வி நிறுவனங்கள் இனி செயல்பட வேண்டும். மாணவர்கள் குழுவாக இணைந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாக வகுப்பறைகள் திகழ வேண்டும்.

ஸ்டிமுலேட்டர், கம்ப்யூட்டர் உட்பட தேவையான அனைத்து கருவிகளும், உபகரணங்களும் வகுப்பறைகள் பெற்றிருக்க வேண்டும். தொழில்நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அத்தகைய செயல்முறைக்கு, உறுதுணையாக இருப்பதுவே ஆசிரியர்களின் பணியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய சூழல், விரைவில் இந்திய கல்வி நிறுவனங்களில் வரும் என்று நம்புவோம்.

-மதன் ஏ. செந்தில், தலைவர், ரத்தினம் கல்வி நிறுவனங்கள், கோவை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us