கால்நடை மருத்துவ படிப்புகள் | Kalvimalar - News

கால்நடை மருத்துவ படிப்புகள்ஜூன் 29,2023,17:29 IST

எழுத்தின் அளவு :

மனிதனின் உற்ற தோழனாகவும், விவசாயிகளின் ஆதாரமாகவும் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகள் விளங்குகின்றன. மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்கள் மீதும் அதீத கவனம் செலுத்தப்படும் நிலையில், கால்நடை நிபுணர்களின் தேவை இன்றியமையாததாக உள்ளது. 



அத்தகைய நிபுணர்களை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் பரவலாக ஏராளமான கல்வி நிறுவனங்களால் கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.




வேலை வாய்ப்புகள்:


பால் உற்பத்தி, இறைச்சி ஏற்றுமதி, ஆடு, மாடு வளர்ப்பு, கால்நடை பரமரிப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் தொடங்கி பூனை, நாய் போன்ற வீட்டுப் பிராணிகள், உயிரியல் பூங்காக்கள், உயிரியல் ஆராய்ச்சிகள் என பல தளங்களில் பயிற்சி பெற்ற கால்நடை நிபுணர்களுக்கான தேவை உள்ளது. 



பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் நாய்களின் ஆரோக்கியத்தை பேணுதல், கல்விநிறுவனங்களில் விரிவுரையாளராக பணிபுரிதல், தனியாக வளர்ப்பு பிராணிகளுக்கான கிளினிக்குகள் தொடங்குதல், இந்திய அரசு நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் என பல்வேறு வேலை மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உள்ளன. 



உயிரியல் சார்ந்த நவீன ஆராய்ச்சிகள், பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், கால்நடை வளர்ப்பு, உணவுப் பொருட்கள் பதனிடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிலும், கால்நடை மருத்துவம் பயின்றவர்களின் தேவை அதிகம் உள்ளது. 



வழங்கப்படும் படிப்புகள்:


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு - பி.வி.எஸ்சி., & ஏ.எச்., மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகியவற்றில் நான்கு ஆண்டுகள் கொண்ட பி.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. 



கல்வித்தகுதி:


இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியல் அல்லது தொழில்கல்வி பாடங்களை படித்திருக்க வேண்டும். 



கல்வி நிறுவனங்கள்:


சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலை மற்றும் தேனி உள்ளிட்ட ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவைதவிர, சென்னையில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி, ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி செயல்படுகிறது. 




சேர்க்கை இடங்கள்:


பி.வி.எஸ்சி., & ஏ.எச்., படிப்பில் மொத்தம் 660 இடங்களும்,  பால்வள, கோழியின உற்பத்தி, உணவு தொழில்நுட்ப படிப்புகளில் மொத்தம் 100 இடங்களும் உள்ளன. 



விபரங்களுக்கு: https://www.tanuvas.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us