தொடர் கற்றல் வெற்றிக்கு அடித்தளம்! | Kalvimalar - News

தொடர் கற்றல் வெற்றிக்கு அடித்தளம்!ஜூலை 17,2023,16:35 IST

எழுத்தின் அளவு :

இன்றைய டிஜிட்டல் காலத்தில், தொழில்நுட்பம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மனித வாழ்வுடன் கலந்துவிட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தவர்கள்; 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிஜிட்டல் மாற்றங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டவர்கள். இத்தகைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்குமான வாய்ப்பு  அனைவருக்குமே சாத்தியமாகி உள்ளது.



பரந்து விரிந்து கிடக்கும் அத்தகைய தகவல்களை எப்படி படிக்க வேண்டும், எவற்றை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்வதே மாணவர்களுக்கான மிகப்பெரிய சவால் தான்.  இந்த சவாலை எதிர்கொள்ள பொறியியல் படிப்பாக இருந்தாலும் சரி, கலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் சரி மாணவர்கள் செய்ய வேண்டியது புதிதாக கற்பதும், தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை வளர்த்து கொள்வதுமே! 




கம்ப்யூட்டர் அறிவு



புதிய படைப்புகளை, கட்டுரைகளை, ஆராய்ச்சி வெளிப்பாடுகளை தேடித்தேடி படிப்பதுடன் நாம் புதிதாக என்ன செய்யலாம், வித்தியாசமாக என்ன செய்யலாம், புத்தாக்கத்தை எங்கிருந்து எப்படி தொடங்கலாம் என்பதில் தேடல் இருத்தல் வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை சரியாக புரிந்து கொண்டு துரிதமாக, புதிய கண்டுபிடிப்புகள் என்ற பாதையில் பயணிக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்து படித்தாலும், அந்த துறை சார்ந்த அறிவு மட்டுமல்லாது பல்வேறு துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, எந்த உயர் கல்விப்பாதையை தேர்தெடுத்தாலும் சரி கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு என்பது அவசியம். 



கம்ப்யூட்டரும் அது சார்ந்த தொழில்நுட்பங்களான பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, ஏ.ஆர்., வி.ஆர்., ஆகியவை பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பங்கள். இந்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் துறைக்கேற்ற பங்களிப்பை சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை நடைமுறைக்கு கொண்டு வர, தொடர் கற்றலுக்கான ஆர்வத்தினையும், உந்துதலையும் மாணவர்களிடம் வளர்ப்பதற்கு ஏற்ப ’இன்னோவேஷன்’ செயல்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி நோக்குடனான செய்முறைகளை கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். 



தொடர் கற்றல்



உயர்கல்வி படிக்கும் மாணவர்களிடமிருந்து தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது, பல்துறை சார்ந்த அறிவும், தொடர்ந்து கற்றலுக்கான ஆர்வமுமே! மிக வேகமான தொழில்நுட்ப மாற்றங்களை நாம் சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில், யார் ஒருவர் தொடர்ந்து படிப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய வேலை வாய்ப்பினை பெறுவதும் சாத்தியம். இந்த ஆர்வமுள்ள மாணவர்கள் புதிய ஆராய்ச்சி அணுகுமுறையினையும், அந்த ஆராய்ச்சி வெளிப்பாட்டை சரியாக பயன்படுத்துவதற்கான ஆற்றலையும் நிச்சயமாக பெற்றிருப்பார்கள். 



கல்லூரிகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அந்த பல்கலைக்கழகங்களுக்கு சென்று, ஒரு சில நாட்கள் படித்து கிரெடிட் பெறலாம். இத்தகைய பல்முனை கற்றலுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் எந்த துறையை எடுத்து படித்தாலும் வெற்றி நிச்சயம் என்பது உறுதி. பெற்றோர்கள், பேராசிரியர்கள் இணைந்து இத்தகைய மாணவர்களை உருவாக்குவதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 




-டி.லட்சுமி நாராயணசுவாமி, நிர்வாக அறங்காவலர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கோவை.


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us