கார்டியாலஜி படிப்புகள் | Kalvimalar - News

கார்டியாலஜி படிப்புகள்அக்டோபர் 17,2023,19:45 IST

எழுத்தின் அளவு :

மனித இதயத்தின் செயல்பாடு, செயல்திறன், பரிசோதனை, கவனிப்பு உட்பட இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடப்பிரிவுகளை கார்டியாலஜி படிப்பு கொண்டுள்ளது. இதய நோய்களை கையாளும் முறை, இதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் கார்டியாலஜி படிப்பில் விரிவாக கற்றுத்தரப்படுகிறது. 



படிப்புகள்:


பி.எஸ்சி.,- கார்டியாலஜி 


பி.எஸ்சி.,- கார்டியாக் டெக்னாலஜி


பி.எஸ்சி.,- கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜி


பி.எஸ்சி.,- தொராசிக் சயின்ஸ்


பி.எஸ்சி.,- கார்டியாக் டெக்னீசியன்


டிப்ளமா இன் கார்டியாலஜி டெக்னீசியன்


டிப்ளமா இன் கார்டியோதொராசிக் சர்ஜரி



தகுதிகள்:


12ம் வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இப்படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெறத் தேவை இல்லை. எனினும், சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனிப்பட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்களை வழங்குகின்றன.



பாடத்திட்டம்:


முக்கியத்துவம் வாய்ந்த பி.எஸ்சி.,- கார்டியாலஜி படிப்பில் அடிப்படை உடல்கூறியல், நுண்ணுயிரியல், உடலியல், உயிர்வேதியியல், அட்வான்ஸ்டு எலக்ட்ரோ கார்டியோகிராபி, எக்கோ கார்டியோகிராபி, கார்டியாக் டெக்னாலஜி, பயன்பாட்டு மருந்தியல், உடற்பயிற்சி அழுத்த சோதனை மற்றும் இசிஜி பதிவு ஆகியன முக்கிய பாடங்களாக உள்ளன. ரத்த பரிசோதனைகள், ரத்த வகை, சிறுநீர் பகுப்பாய்வு மற்றும் பிற சோதனைகள் போன்ற ஆய்வுக்கூட நடைமுறைகளை பற்றியும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 



வேறுபாடு:


எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகு எம்.எஸ்.,-கார்டியாலஜி முடிப்பவர்கள் இருதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணராக சிகிச்சை அளிக்கின்றனர். காரிடியாலஜி சார்ந்த இளநிலை பட்டப்படிப்பை படித்தவர்கள், மருத்துவர்களுக்கு உதவிகரமாகவும், தொழில்நுட்பங்களை கையாளுபவராகவும், நோயாளிகளுக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்பவராகவும் செயல்படுகின்றனர்.



வாய்ப்புகள்:


பி.எஸ்சி.,- கார்டியாலஜி படிப்பிற்கு பிறகு 2 ஆண்டு கால எம்.எஸ்சி.,- கார்டியாலஜி படிப்பை தொடரலாம். நான் - இன்வேசிவ் கார்டியாலஜி, வாஸ்குலர் தொழில்நுட்பம், எக்கோ கார்டியோகிராபி, இன்வேசிவ் கார்டியாலஜி, இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட் கார்டியாலஜி ஆகிய துறைகளில் சிறப்பு தகுதிகளை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். 


இதய நோய் நிபுணர், கார்டியாலஜியில் மருத்துவ செவிலியர், எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட், கார்டியோவாஸ்குலர் டெக்னாலஜிஸ்ட், மெடிக்கல் சோனோகிராபர், டயாலிசிஸ் டெக்னீஷியன், நெப்ராலஜிஸ்ட் டெக்னீஷியன், கன்சல்டன்ட் நெப்ராலஜிஸ்ட், ஐ.சி.யூ., இன்டென்சிவிஸ்ட் போன்ற பணி நிலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. 



பணிபுரியும் மருத்துவமனை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஊதிய அளவு மாறுபடும். மருத்துவத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்டத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு 'கார்டியாலஜி’ படிப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us