நியூசிலாந்தில் உயர்கல்வி | Kalvimalar - News

நியூசிலாந்தில் உயர்கல்விபிப்ரவரி 18,2024,22:17 IST

எழுத்தின் அளவு :

வேகமாக மாறிவரும் உலகில் வெற்றிபெற மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கல்வியை வழங்குவதோடு, ​ஏராளமான முன்முயற்சிகளின் வாயிலாக, மதிப்புமிக்க அனுபவத்தை நியூசிலாந்து வழங்குகிறது. 



நியூசிலாந்தில் மொத்தம் உள்ள 8 பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. பொதுவான அம்சம்யாதெனில், தொழில் நிறுவனங்களுடன் மிகவும் இணக்கமான நல்லுறவை கொண்டுள்ளதோடு, ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்துகின்றன. 



சிறப்பம்சங்கள்



நியூசிலாந்தை பொறுத்தவரை, தரமான உயர்கல்வி வழங்குவதுடன் சரியான நோக்கங்களை வகுத்து அதற்கு ஏற்ப கல்வி திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், கொரானா பெருந்தொற்று முடிவிற்கு வந்த பிறகு, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம். பெரும் நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் வசிக்கும் 15 லட்சம் பேரால் 130 மொழிகள் பேசப்படுகின்றன. ஏராளமான இந்தியர்கள் வசிக்கும் இந்நகரில் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. 



பொறியியல், தொழில்நுட்பம், கணிதம், அறிவியல், துணை மருத்துவ படிப்புகள் என அனைத்து துறைகளிலும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களை வழங்குகின்றன. வகுப்பறை பாடங்களை கடந்து, விளையாட்டு, இதர திறன் வளர்ப்பிலும், வாழ்க்கை திறன்களை கற்றுக்கொடுப்பதிலும் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. கடினமாக உழைக்கக் கூடிய மற்றும் திறமை மிக்க இந்திய மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை இணைந்த வாய்ப்புகளை நியூசிலாந்து வழங்குகிறது.



செலவீனங்கள்



கல்விக்கட்டணம் தவிர்த்து, தங்குமிடம் மற்றும் உணவிற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் நியூசிலாந்து டாலர்கள் செலவாகும். ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான கல்விக் கட்டணமும், இதர செலவினங்களும் கொண்டது, நியூசிலாந்து.



25 ஆயிரம் மாணவ, மாணவிகளுடன் நாட்டிலேயே அதிகம் பேரை கொண்ட இளம் கல்வி நிறுவனமான, ஆக்லாந்து யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜியில் ஆசிரியர், மாணவர் விகிதம் 25. பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் வழங்கும் உதவித்தொகை திட்டங்கள் மட்டுமின்றி, கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர், டிசைன், தொழில்நுட்பம், கணிதம் உட்பட பல்வேறு துறைகளில் பிரத்யேக உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 



பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி மற்றும் உணவு கட்டணத்தில் 50 சதவீதம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.  வணிகம், பொருளாதாரம், பொறியியல், சட்டம், நர்சிங், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்புகளில் அதிகமான இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 



-பேராசிரியர் கைலிட்டில்பேர், ஆக்லாந்து யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி, நியூசிலாந்து.





Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us