தரங்குறைந்த கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் | Kalvimalar - News

தரங்குறைந்த கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும்

எழுத்தின் அளவு :

""திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பி.., ஜியோ இன்பர்மாடிக்ஸ் டெக்னாலஜி படிப்பு துவங்கவிருப்பதாக," துணைவேந்தர் காளியப்பன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை தவிர, அண்ணா பல்கலைக்கழகம் மூன்றுநகரங்களில் துவக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் திருநெல்வேலியிலும் அண்ணா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் தற்போது இப்பல்கலைக்கழகம் செயல்படுகிறது. முதல் முறையாக, பல்கலைக்கழகத்தின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மையங்களில் பகுதி நேர பி.., படிப்பு துவங்கி உள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2008-09ம் கல்வி ஆண்டுக்கான முழுநேர பி.., படிப்புகளுக்கான முதல் சேர்க்கையும் நடைபெறவிருக்கிறது.

திருநெல்வேலியில் துணைவேந்தர் காளியப்பன் நமது நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் இப்பல்கலைக்கழக பகுதி நேர பி.., படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் 252 கல்லூரிகள் இயங்கிவந்தன. இது நிர்வாகம் செய்வதில் சிக்கல் இருந்தது. கல்லூரிகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதும், மேற்பார்வையிடுவதும் கடினமாக இருந்தது.

எனவே கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே திருநெல்வேலியில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

இப்பல்கலைக்கழகத்தின் கீழ், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 42கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கல்லூரிகளின் செயல்பாடுகள் பற்றி மேற்பார்வையிடுவது மிக எளிதாக உள்ளது.

இப்பகுதியில் சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் அங்கீகாரத்தை மறுத்தேன் இதனால் அக்குறையை அவர்கள் உடனடியாக நிவர்த்தி செய்தார்கள். 13 கல்லூரிகள் புதிதாக துவங்க அங்கீகாரம் கேட்டு தற்போது விண்ணப்பித்துள்ளன.

பொதுவாக பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாகவே இருக்கின்றன. அதற்கு காரணம் ஏ..சி.டி.சி.,யில் அங்கீகாரம் பெறுவதற்காக இக்கல்லூரிகள் அதை செய்து விடுகின்றன. ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில்தான் பிரச்னை காணப்படுகிறது.

நெல்லை பல்கலையின் கீழ் வரும் மாவட்டங்களில் உள்ள ஒரு சில கல்லூரிகளைத் தவிர பிற கல்லூரி களின் தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சென்னை பகுதியில் உள்ள அளவுக்கு தென்மாவட்டங்களில் தரமான இன்ஜினியரிங் கல்லூரிகள் இல்லை. அதற்கு காரணம் இம்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவை. அத்துடன் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் சென்னையில் அதிகம் கிடைக்கிறார்கள். தென் மாவட்டங்களில் நன்றாக படித்தவர்கள் அங்கு பணிபுரிய இருப்பதில்லை. அவர்கள் வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு சென்று விடுகிறார்கள். இந்நிலையை மாற்ற நாங்கள் முயற்சி செய்வோம். சென்னையில் உள்ள நல்ல ஆசிரியர்களை தென்மாவட்டங்களுக்கு அழைத்துவர முயற்சி செய்வோம். தரம் குறைவாக உள்ள கல்லூரிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.

இப்பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் முதல் ஜியோ இண்பர்மேடிக்ஸ் டெக்னாலஜி படிப்பு துவங்க இருக்கிறது. இதற்காக செயற்கைக் கோள் புள்ளிவிபரங்கள் தேவைப் படுவதால் உதவிகேட்டு திட்டவரைவு அனுப்பியுள்ளோம். நாட்டிலேயே சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் தான் இந்த படிப்பு உள்ளது. சிவில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இவ்வாறு காளியப்பன் தெரிவித்தார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us