மாண்டசோரி - குழந்தை மேம்பாடு மற்றும் ஆசிரியப் பணிகள் | Kalvimalar - News

மாண்டசோரி - குழந்தை மேம்பாடு மற்றும் ஆசிரியப் பணிகள்

எழுத்தின் அளவு :

குழந்தைகளின் இயல்புக்கு ஏற்றதான மாண்டசோரி கல்விமுறையில், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் சிறப்பான விதங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகளின் எழுத்துத் திறன்களை மேம்படுத்துதல், அவர்களுக்கு தேவைப்படும் உதவி மற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களின் பணித் தன்மைகள் போன்றவைப் பற்றிய சில விபரக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எழுதத் தொடங்குதல்

ஆங்கிலத்தில் பலவகை எழுத்துக்கள் உள்ளன. ஆனால், மாண்டசோரி கல்விமுறையில் தொடர் எழுத்துக்களையே(CURSIVE LETTERS) அறிமுகம் செய்கிறோம். இவற்றில் பல வளைவுகள் மற்றும் கடினமான திருப்பங்கள் உள்ளன. இந்த வயதில், குழந்தைகளுக்கு, கடினமான அசைவுகள் செய்யும் ஆர்வம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, திறனும் உள்ளது. நாளடைவில் இந்தத் திறனும், சக்தியும் குறையக்கூடும். எனவே,

தொடர் உப்புத்தாள் எழுத்துக்கள்(CURSIVE SCRIPT SANDPAPER LETTER) மூலம் 3.5 வயதில் வருடுகிறார்கள். 4.5 வயது ஆகும்போது உற்சாகத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இது சரியான வயது.

அவர்கள் சுமார் 4.5 வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். நம்மிடம் 2.5 வயதில் வருகிறார்கள். அவர்களுக்கு, இந்த சூழலில் மறைமுகமாகவும், நேரடியாகவும், இயக்கத் திறனுக்கு ஏற்றவாறும், அறிவுத்திறனுக்கு ஏற்றவாறும் உதவி அளிக்கப்பட்டால், இந்த எழுத்துப் பணி ஒரு திடீர் வெடிப்புப் போல் ஏற்படும். "மனிதனுக்கு எழுதுவதென்பது ஒரு இயல்பான குணம். ஆகையால், குழந்தையின் வளர்ச்சியில் ஒரு தருணத்தில் இந்த உந்துதல் ஏற்படுகிறது. குழந்தையின் மேம்பாட்டில் இது ஒரு மைல்கல். எழுத ஆரம்பித்தலானது, தன்னுடைய மேம்பாட்டில் ஒரு திறனை வெளிப்படுத்துவதாகும்" என்று மாண்டிசோரி அம்மையார் கூறுகிறார்.

குழந்தைகள் 2.5 வயதிலிருந்து 4.5 வயதிற்குள் தங்களைத் தாங்களே தயார் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து கூடிவரும்போது, அதற்கு ஒரு பொறி தேவைப்படுகிறது. இந்தப் பொறி என்பது, சூழலில் உள்ள மற்ற குழந்தைகள் எழுதுவதைப் பார்ப்பதாகும். பொதுவாக, மாண்டசோரி கல்விமுறையில், 2 முதல் 5 வரையான குழந்தைகள் கலந்திருப்பார்கள். எனவே, பெரிய குழந்தைகள் எழுதுவதைப் பார்க்கும்போதும், ஆசிரியர்கள் எழுதியதை சுவரில் ஒட்டி வைத்திருப்பதைப் பார்க்கும்போதும், ஒரு பொறி தட்டியதைப் போல் உணர்ந்து எழுத ஆரம்பிப்பார்கள். இதை ஒரு வெடிப்பு என்று ஏன் கூறுகிறோம் என்றால், எழுத ஆரம்பிக்கும் குழந்தைகள் நிறுத்தாமல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த புதிய மனோநிலையை வரவேற்கும் பொருட்டு, மாண்டசோரி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் தம்மைத்தாமே தயார்செய்து கொள்கிறார்கள்.

குழந்தைகளுக்கான உதவி

குழந்தையின் இந்தப் புதிய முயற்சியை ஆவலுடனும், உற்சாகத்துடனும் வரவேற்க வேண்டும். பிழைகளை சுட்டிக்காட்டக் கூடாது. அதன்பொருட்டு, ஆசிரியைகள், பெற்றோரை தயார் செய்கிறார்கள். பெற்றோர், குழந்தைகளை எழுதுமாறு வற்புறுத்தக்கூடாது. ஆசிரியைகளும் வற்புறுத்தமாட்டார்கள். எழுத்தின் வடிவத்தை, காற்றில், மணலில், தூசி உள்ளிட்ட எல்லாவற்றிலும் குழந்தைகள் எழுதுவார்கள். பொதுவாக, குழந்தைகள் எழுத ஆரம்பித்து 6 மாதம் கழித்துதான் வாசிக்கத் தொடங்குவார்கள். குழந்தைக்கு 5 வயதாகும்போது திடீர் அனுபவமாக வாசிப்பு வருகிறது. குழந்தை வாசிக்க ஆரம்பிக்கையில், அதை உற்சாகத்துடன் வரவேற்க வேண்டும். கடைகளின் பெயர்கள், விளம்பரங்கள், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் காட்டும் பொருட்களின் பெயர்கள் என்று அனைத்தையும் வாசிக்க முயற்சிக்கலாம். இச்சமயத்தில், பிழைகளை நேரடியாக சுட்டிக்காட்டாமல், தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

மாண்டசோரி கல்விமுறையில் ஆசிரியைகளின் பணிகள்

மாண்டசோரி கல்விமுறைப் பற்றி முறையாகப் பயிற்சிபெற்ற ஆசிரியைகள், பொதுவாக நாம் பிறவகைப் பள்ளிகளில் காணும் ஆசிரியைகள் போலன்றி, குழந்தைகளின் உண்மையான தேவைகள் அறிந்து(உளவியல் ரீதியில்) உதவி செய்பவர்களாக இருப்பார்கள். இந்தக் கல்விமுறையில் உபகரணங்களும், தேவையான சூழலும் இருந்தால் மட்டும் போதாது. குழந்தைகளுக்கு சுதந்திரமும் தேவை. அந்த சுதந்திரம், அச்சூழலைப் பராமரிக்கும் ஆசிரியையே சார்ந்தது.

ஒரு குழந்தை, தான் விரும்பும் உபகரணத்தை தானே தேர்ந்தெடுக்கிறது. ஆசிரியை அதை தடுப்பதில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த உபகரணத்தை வைத்து எவ்வாறு செயல்களை மேற்கொள்கிறார்கள் என்று உற்று நோக்குதலே ஆசிரியைகளின் முக்கியப் பணி. ஒரு குழந்தை எந்த செயலைத் தேர்ந்தெடுக்கிறது, அதை எத்தனைமுறை திரும்பச் செய்கிறது, அதன் அசைவுகள் எவ்வாறு உள்ளன, கவனத்துடன் செயல்படுகிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு கவனிக்கும்போதுதான் அதன் நிலையறிந்து, அதற்கு தேவையான மற்றும் பொருத்தமான அடுத்தக்கட்ட உதவியை ஆசிரியையால் அளிக்க முடியும்.

உபகரணங்களை எடுத்த இடத்தில் மீண்டும் வைப்பதற்கு பயிற்சியளிப்பதன் மூலம் குழந்தைகளிடம் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுகிறது. மேலும், குழந்தைகளின் மேம்பாட்டிற்கு தேவையான செயல்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக வழங்குகிறார்கள். இதன்மூலம், 2.5 வயதிலிருந்து 5 வயதுவரை இருக்கும் குழந்தைக்கு, படிப்படியான, அதன் வளர்ச்சிக்குத் தேவையான, அந்தந்த சூழலுக்கு ஏற்ப தேவையான உதவிகளை செய்யும் ஒரு பொருத்தமான உதவியாளராகவே ஆசிரியை இருப்பார்.

இந்தக் கல்விமுறையில் ஆசிரியை என்பவர், தனக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்து, குழந்தைகளை மனப்பாடம் செய்ய வைப்பதில்லை. ஒரு குழந்தையானது, எவ்வாறு கருவில் முதல் நாளிலிருந்து 9 மாதங்கள் வரை தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறது? அதாவது தாயின் கருவில் இருக்கும்போது அதற்கு வயிற்றுக்குள் சூழல் உள்ளது, உணவு உள்ளது, அது தானாகவே உருவாகிறது. இயற்கையின் விதிப்படி வளர்கிறது. இப்படியெல்லாம் நிகழும்பொருட்டு தேவையான சுதந்திரம் உள்ளது. அதுபோல் இந்த உலகில் பிறந்தபிறகு, அது தன்னிச்சையாக செயல்படுவதற்கு தேவையான சுதந்திரம் தேவை.

அவ்வாறு சுதந்திரம் பெற்று செயலாற்றும்போதுதான் குழந்தையானது தனது இயல்பு குணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், குழந்தைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையறிந்து தகுந்த உதவியளிக்க வேண்டும். கல்வி என்பது எந்தளவிற்கு முக்கியமானது என்று ஆசிரியை மறைமுகமாக உணர்த்த வேண்டும். இந்த முறையில், ஒரு குழந்தையின் பரிணாம மேம்பாட்டிற்கு ஆசிரியை அளிக்கும் தொடர்ச்சியான உதவிகளே, மாண்டசோரி கல்விமுறையில் அவர்களின் பணிகளாகும்.

இக்கல்விமுறையை செயல்படுத்துதல்

இந்தக் கல்விமுறையானது, தமிழகத்தில், சென்னையைப் பொறுத்தவரை, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில்(அரசு அங்கன்வாடிகள்) செயல்படுத்தப்படுகிறது. நிஷ்காம் டிரஸ்ட்(NISHKAM TRUST) என்ற தொண்டு நிறுவனம், ஒரு சில குழந்தைகள் மையங்களில் மாண்டசோரி கல்விமுறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் மாண்டசோரி செயல்முறை முழுமையான அளவில் குழந்தைகளிடம் சென்று சேர்வதற்கு உதவிபுரியும் பயிற்சிபெற்ற ஆசிரியைகளை நியமித்து செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பயின்ற குழந்தைகள் பல பெரிய மையத்தில் சேர்ந்து படிக்கிறார்கள். பெற்றோர்களும் இதைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us