இன்ஜினியரிங் துறையில் பெருகும் வாய்ப்புகள்! | Kalvimalar - News

இன்ஜினியரிங் துறையில் பெருகும் வாய்ப்புகள்!

எழுத்தின் அளவு :

இன்று உலகில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு இன்ஜினியரிங் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான் காரணம். இத்துறை நாளுக்கு நாள் புதிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. நமது வாழ்க்கைத் தரத்தை புரட்டிப்போடும் வகையில் புதிய கருவிகள், சாதனங்களை இன்ஜினியர்கள் உருவாக்கி வருகின்றனர். இத்துறையில் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "விர்ச்சுவல் யுனிவர்சிட்டி"யைப் பற்றி கற்பனை செய்திருக்க முடியாது. ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஸ்டுடியோவில் நடத்தும் பாடங்கள் செயற்கைக்கோள் வழியாக பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பிற கல்லுரிகளில் உள்ள வகுப்பறைகளுக்குள்ளும் செல்கின்றன. இன்ஜினியரிங் உதவியால் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சியை எட்ட முடியும். அறிவியலால் நேரடியாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவ முடியாது என்பது தான் உண்மை. விமானமும், நீராவி இன்ஜினும் உருவாக்கப்பட்ட பின் தான் அவற்றின் பின் உள்ள அறிவியல் உண்மைகளை விஞ்ஞானிகளால் அறிந்து கொண்டு விளக்க முடிந்தது. தேவையும், வாய்ப்புமே புதிய தொழில்நுட்பங்களை படைக்கிறது. இன்று மனிதனின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது, தகவல் தொடர்பு வசதிகள் அதிகரித்துள்ளன, பொருளாதார வளர்ச்சி காரணமாக வசதிகள் பெருகியுள்ளன. இந்த மாற்றங்களை எதிரொலிக்கும் விதமாக நானோடெக்னாலஜி, லாஜிஸ்டிக்ஸ், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எல்லாத்துறைகளிலும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர வேண்டியது அவசியம். சமுதாய சிக்கல்களை தீர்க்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை இன்ஜினியர்கள் உருவாக்க வேண்டும். மருத்துவம், எரிசக்தி, நவீன கம்ப்யூட்டர்கள், தொலைதொடர்பு போன்ற துறைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த இன்ஜினியரிங் அவசியம். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நீர்வளம், வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவைகளை இன்ஜினியரிங் துறையின் உதவியுடன் தான் சமாளிக்க முடியும். உலகத்தரத்தில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்திய உயர்கல்வி அமைப்பு உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும் 17 முதல் 23 வயதிற்குள் உள்ள இளைஞர்களுள் 7.2 சதவீதம் பேருக்கு மட்டுமே உயர்கல்வி கிடைத்துள்ளது. 2020க்குள் நாம் வளர்ந்த நாடாக மாற இதை 20 சதவீதமாக உயர்த்த வேண்டியது அவசியம். 2020ம் ஆண்டுவாக்கில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பது இன்ஜினியர்களுக்கு சவாலாக அமையும். எனினும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரித்திருக்கும். தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, பார்மசூட்டிக்கல் போன்ற உயர் தொழில்நுட்ப துறைகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்திய பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்க இந்த துறைகளின் பங்கு கணிசமானது என்பதை மறுக்கமுடியாது. இதை மிகப்பெரிய சாதனை என்றே கூறலாம். வேலைவாய்ப்புகளை பெருக்கி லட்சக்கணக்கானோரை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இதே வேகத்தில் வளர்ச்சி இருந்தால் இன்னும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும். பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி, இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், போட்டோனிக்ஸ் போன்ற துறைகள் எதிர்காலத்தில் வளர்ச்சியை சந்திக்கும் என நம்பப்படுகிறது. காயமடைந்த, பாதிப்படைந்த உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்புகளையும், திசுக்களையும் சீராக்கி குணப்படுத்த பயோடெக்னாலஜி ஆய்வுகள் நடந்து வருகின்றன. பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்துக்கும் இன்ஜினியரிங் அறிவு அவசியம். நானோசயின்ஸ், நானோஇன்ஜினியரிங் ஆய்வுகள் பயோஇன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கும் உதவுகின்றன. செயற்கை உறுப்புகளை தயாரிக்கவும், சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தவும் நானோபொருட்கள் உதவுகின்றன. பொருளின் அளவை குறைக்கவும், அதன் திறனை மேம்படுத்தவும் போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. இயற்கை பேரிடர்களால் பெருமளவில் மனிதர்களின் இடமாற்றம் நிகழ்கிறது. இவற்றை முன்கூட்டியே அறியும் வகையிலான பொருட்களை உருவாக்குவது பற்றி மெட்டீரியல் சயின்ஸ் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள் திறனும், சக்தியும் எதிர்காலத்தில் மேம்படும் போது அவற்றை பயன்படுத்தும் இன்ஜினியர்கள் மேலும் பல சாதனைகள் புரிய முடியும். எனினும் இவர்கள் தொழில்நுட்ப, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான வரையறைக்குள் செயல்பட்டு சாதிக்க வேண்டியது அவசியம். இன்ஜினியரிங் படிப்பில் சமுதாய தேவைக்கு ஏற்ப புதிய துறைகள் பல உருவாகி வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் ஈடுபடும்போது அந்த துறை பற்றிய ஆழமான அறிவு கிடைக்கிறது. எனினும் இதனால் பரந்த பார்வை கிடைப்பதில்லை. பல்துறை திறன் தேவைப்படும் சிக்கலான பிரச்னைகளில் தீர்வு காண்பதில் இதனால் சிரமம் ஏற்படுகிறது. இது போல இன்னும் பல சிக்கல்கள், சவால்கள், சாதனைகளை இன்ஜினியரிங் துறை எதிர்காலத்தில் சந்திக்க உள்ளது. டாக்டர்.டி.விஸ்வநாதன், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை., ஆராய்ச்சியாளர், தலைசிறந்த நிர்வாகி என பலமுகங்கள் கொண்ட விஸ்வநாதன் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us