பிரிட்டன் | Kalvimalar - News

பிரிட்டன்

எழுத்தின் அளவு :

யுனைடெட் கிங்டம் எனப்படும் பிரிட்டனில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. கிரேட் பிரிட்டன் என்றும் அழைக்கப்படும் பிரிட்டனில் படிப்பது என்பது பல நாட்டு மாணவர்களின் விருப்பமாகவும் குறிக்கோளாகவும் இருக்கிறது. கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது, கல்விப் பிரிவுகள், தங்கும் வசதி என பிரிட்டனில் கல்வி பயிலுவது பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்தியாவிலுள்ள அதன் தூதரகங்களிலேயே அறியலாம். பிரிட்டனில் தரப்படும் கல்வியை 2 பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் தரப்படும் கல்வியை ஒரு பிரிவாகவும் ஸ்காட்லாந்தில் தரப்படும் கல்வியை மற்றொரு பிரிவாகவும் பிரித்து அறியப்படுகிறது. பிரிட்டனில் எந்த படிப்பும் மிகுந்த தரமுடையதாகவும் ஆய்வுக்கான உயரிய வாய்ப்புகளைத் தருவதாகவும் இருக்கிறது. இதனால் தான் பன்னாட்டு மாணவர்களின் கனவுக் கோட்டையாக பிரிட்டன் திகழ்கிறது.



சில சிறப்பம்சங்கள்:
  • கல்வியை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்களோடு, அங்கு படிக்கும் மாணவரின் தரத்தை அறிவதற்கான தரச் சான்று நிறுவனங்களும் செயல்படுகின்றன.
  • இங்கு 16 முதல் 18 வயதுக்குட்பட்டவருக்குக் கற்றுத் தரப்படும் கல்வியை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது.
  • இங்கு தரப்படும் கல்விப் புலங்கள் அனைத்துமே பெருமளவில் நடைமுறை வேலைச் சூழல்களை கருத்தில் கொண்டு தரப்படுவதால், இங்கு படிக்கும் மாணவர்கள் உலக அளவில் சிறப்பான வேலை வாய்ப்புகளைப் பெறுவதோடு தங்கள் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுகிறார்கள்.
  • இங்கு தரப்படும் கல்வியானது வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால் மாணவர் எந்த மாதிரியான கல்வியை ஏற்கனவே பெற்றிருந்தாலும் சிறப்பாக படிக்க முடியும்.
  • பொதுவாக ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மாணவர்களுக்கிடையேயான பரஸ்பர உறவு சிறப்பாக இருக்கிறது.
  • ஏற்கனவே 15 ஆண்டுகள் கல்வி பெற்றிருப்பவர் நேரடியாக பட்ட மேற்
    படிப்பில் சேரலாம்.
  • படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் பணி புரியும் வாய்ப்பு பிரிட்டனில் பொதுவாகக் கிடைக்கிறது.
  • பிரிட்டனில் கல்வி பெறுபவருக்கு உலக அளவில் எங்கும் சிறப்பான மதிப்பும் வரவேற்பும் கிடைக்கிறது.


படிப்புகள் ஒரு பார்வை

பிரிட்டனில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் உள்ளன. தொழில் ரீதியான படிப்புகள் கூட பட்டப்படிப்புகளாகத் தரப்படுகின்றன. சான்றிதழ் படிப்புகள் பொதுவாக தரப்படுவதில்லை. உலக ரீதியிலான அன்றாட நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பாடத் திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன.

பட்டப்படிப்பு நிலையில் பி.ஏ., பி.எட்., பி.இ., பி.எஸ்சி., படிப்புகள் தரப்படுகின்றன. இவற்றில் பட்ட மேற்படிப்புகளும் தரப்படுகின்றன. பட்ட மேற்படிப்பு மிக உயரிய தரத்தில் இருப்பதால் இவை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சிறந்த திறனுடையவர்களாக உருவாகிறார்கள். பட்ட மேற்படிப்பின் காலம் ஒரு ஆண்டு. எம்.பில்., எம்.ரிசர்ச் போன்ற ஆய்வுப் படிப்புகள் ஒன்று முதல் 3 ஆண்டு கால அளவைக் கொண்டவை. பி.எச்டி., டி.பில்., என அழைக்கப்படும் டாக்டரேட் படிப்புகளும் உண்டு. 3 ஆண்டு கால அளவைக் கொண்டவை இவை. பிரிட்டனின் எம்.பி.ஏ., படிப்புகள் சர்வதேச சிறப்புப் பெற்றவை. அடிப்படை நிர்வாகத் திறனை ஊட்டுவதில் தொடங்கி, வங்கித் துறை, கட்டுமானம், எரிபொருள் துறை, உடல் நலத் துறை, டூரிசம், போக்குவரத்து மற்றும் தொழில் நுட்பம் போன்ற பிரிவுகளில் இதைப் படிக்க முடியும். தொலை துõர முறையிலும் இதைப் படிக்கலாம். எம்.பி.ஏ.,வின் கால அளவு ஒரு ஆண்டாகும்.

பிரிட்டனின் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களாக அறியப்படுவது கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்கள் தான். இவற்றைப் பற்றி மீடியாவில் பல தகவல்கள் வெளிவருவதால் இவற்றைத் தவிர்த்து வேறு சில பல்கலைக்கழகங்களைப் பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். கார்டிப் பல்கலைகழகம் www.cardiff.ac.uk வேல்சில் கேதேஸ் பார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் 1883ல் தொடங்கப்பட்டது. இப்போது இங்கு மொத்தம் 30 ஆயிரத்து 685 மாணவர்கள் படிக்கிறார்கள். இதன் கீழ் 28 பள்ளிகளும் 4 பட்டப்படிப்பு கல்லூரிகளும் இயங்குகின்றன. இவை நிர்வாக வசதிக்காக 2 கல்லூரிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

நவீன உத்திகளைக் கொண்டு சிறப்பான கல்வியையும் ஆய்வையும் வழங்குவதை இந்த பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இதில் மனித வளப் படிப்புகள், தகவல் தொழில் நுட்பம், தொழிற் படிப்புகள் மற்றும் வாழ்நாள் முழுதும் கற்கக்கூடிய படிப்பு வகைகள் என பல மாறுபட்ட படிப்புகள் உள்ளன. உலகெங்குமிருந்தும் வந்து படிக்கும் மாணவர்கள், திறம் வாய்ந்த ஆசிரியர்கள், இயற்கை எழில் கொஞ்சும் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரம்யமான பல்கலை வளாகம் மற்றும் பல புதிய பரிமாணங்களைக் கொண்ட கல்வி முறை என இப் பல்கலைக்கழகத்திற்கென்று சிறப்புகள் பல இருக்கின்றன.
சில சிறப்பம்சங்கள்
  • இங்கு படிக்கும் மொத்த மாணவர்களில் 17 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள்
  • மிக உயர்ந்த தேர்ச்சி வீதத்தை இது கொண்டிருக்கிறது
  • இதில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதிலேயே பட்ட மேற்படிப்பைத் தொடருகின்றனர்
  • பிரிட்டனின் புகழ் பெற்ற ரஸ்சல் குழுமத்தின் உறுப்பினராக இந்த பல்கலைக்கழகம் விளங்குகிறது
  • முதல் ஆண்டில் சேரும் மாணவருக்கு உறுதியான விடுதி வசதி கிடைக்கிறது.
    நவீன கம்ப்யூட்டர் வழி கல்வி முறைகள்
  • கார்ப்பரேட் அமைப்புகளுடன் கொண்டிருக்கும் உடன்பாடுகளால் உறுதியான வேலை வாய்ப்பு
  • மாணவர்:ஆசிரியர் விகிதம் குறைவாக இருப்பதால் தனி கவனம் பெறுவது எளிதாக இருக்கிறது. இதனால் கல்வித் தரம் சிறப்பாக அமைகிறது.
  • தங்குமிடத்துக்கும் வகுப்புகளுக்கும் இடையே நடந்து செல்லக் கூடிய தொலைவே இருப்பது மற்றுமொரு சிறப்பு
  • இங்கு பயிலும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் உயர் கல்வி அல்லது வேலை வாய்ப்பைப் பெற்று விடுகிறார்கள்.


கார்டிப் படிப்புகள்

ஆர்க்கிடெக்சர், பயோசயின்ஸ், தொழிலியல், வேதியியல், நகர்ப்புற மேம்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், பல் மருத்துவம், இன்ஜினியரிங், ஆங்கிலம், ஐரோப்பிய படிப்புகள், சுகாதார அறிவியல், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சியியல், பத்திரிகைத் துறையியல், சட்டம், கணிதம், வாழ்க்கை முறைப் படிப்புகள், உற்பத்தி, இசை, நர்சிங், ஆப்டோமெட்ரி, பார்மசி, இயற்பியல், வானவியல், மருத்துவம், உளவியல், மதம் தொடர்பான படிப்பு போன்ற பல படிப்புகள் இப் பல்கலைக்கழகத்தில் பல நிலைகளில் தரப்படுகின்றன.

கிங்க்ஸ்டன் பல்கலைக்கழகம்:
www.kingston.ac.uk தேம்ஸ் நதிக்கரையின் அருகாமøயிலும் லண்டன் நகரிலிருந்து 25 நிமிட தொலைவிலும் உள்ள கிங்ஸ்டன் நகரில் அமைந்துள்ளது இந்த பல்கலைக்கழகம். இங்கிருந்து ஹீத்ரு மற்றும் கேட்விக் விமான தளங்களை எளிதாக அடையலாம் மேற்படிப்பில் பங்கு பெறுதல் என்ற கருத்தின் அடிப்படையில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இப் பல்கலைக்கழகத்தின் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது. அது மட்டுமன்றி, கல்விக்கும் வியாபார உலகிற்கும் இடையே நேரடியான தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் இது சிறந்து விளங்குகிறது. இதில் அடிப்படைப் படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு ஆகிய நிலைகளில் பல விதமான படிப்புகள் தரப்படுகின்றன.

சில குறிப்புகள்:
  • பட்டப்படிப்புகளாக ஆர்க்கிடெக்சர், கலை மற்றும் வடிவமைப்பு, தொழில் நிர்வாகம், வேதியியல், கம்ப்யூட்டர், பொருளாதாரம், இன்ஜினியரிங், சூழலியல், பூகோளம், மண்ணியல், சுகாதாரம், மொழியியல், சட்டம், கணிதம் மற்றும் புள்ளியியல், சினிமா, இசை, சமூக அறிவியல், விளையாட்டு அறிவியல் போன்றவை தரப்படுகின்றன.
  • பட்ட மேற்படிப்புகள் மிகுந்த புதுமையான படிப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்களுடனும் தொழிற்சாலைகளுடனும் இப்பல்கலைக்கழகத்திற்கு நெருங்கிய உறவு உள்ளது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கின்றன.
  • இது தவிர ஆங்கிலத்திற்கான அடிப்படைப் படிப்புகளும் பரந்த அளவிலான ஆய்வுப் படிப்புகளையும் இது தருகிறது.
  • இங்கு மொத்தம் 22 ஆயிரத்து 250 மாணவர்கள் பயிலுகிறார்கள்.
  • இப்பல்கலைகழகம் தரும் படிப்புகள், சேர்க்கை முறைகள் போன்ற அனைத்துத் தகவல்களையும் பல்கலைக்கழகத்தின் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
  • முதலில் நாம் படிக்க விரும்பும் படிப்பையும் பாடத்தையும் தேர்வு செய்வது. பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்வது.
  • பிரிட்டனில் படிக்க விரும்புவோர் தகுதி பெற வேண்டிய ஐ.இ.எல்.டி.எஸ்./டோபல் மற்றும் ஜிமேட் போன்ற தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தகுதி பெறுவது.
  • சேர்க்கைக் கான அனுமதி பெற தேவைப்படும் கட்டுரைகள், பரிந்துரை கடிதங்களை தயார் செய்வது.
  • விண்ணப்பம் பெற்று இறுதியாக தேவைப்படும் சான்றிதழ்களோடு அதை பல்கலைக்கழகத்தில் தருவது.
  • அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தின் அனுமதிக் கடிதத்தோடு
    விசாவுக்கு விண்ணப் பிப்பது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us