பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ரொம்ப ஈசி! மாணவ, மாணவியர் உற்சாகம் | Kalvimalar - News

பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ரொம்ப ஈசி! மாணவ, மாணவியர் உற்சாகம்மார்ச் 25,2024,09:49 IST

எழுத்தின் அளவு :

- நமது நிருபர் -


வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்கள், வினாக்கள் எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்கள், வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்திற்கான பொதுத்தேர்வை எதிர்கொண்டனர். மொத்தம், 37 மையங்களில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.


கணக்குப்பதிவியல் தேர்வை, 591 மாணவர்கள், 683 மாணவியர் என, 1,274 பேர் எழுதினர். 75 மாணவர்கள், 7 மாணவியர் என, 82 பேர் ஆப்சென்ட் ஆகினர். வேதியியல் தேர்வை, 506 மாணவர்கள், 865 மாணவியர் என, 1,371 பேர் எழுதினர். 10 மாணவர்கள், 26 மாணவியர் என, 36 பேர் தேர்வு எழுதவில்லை. புவியியல் தேர்வை, 81 மாணவர்கள், 54 மாணவியர் என, 135 பேர் எழுதினர். 8 மாணவர்கள், 5 மாணவியர் என, 13 பேர் எழுதவில்லை.


தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:


கேசவ் வித்யாமந்திர் பள்ளி மாணவர் அபினேஷ்: வேதியியல் தேர்வில், கட்டாய வினாக்கள் பகுதியில் இருந்து, வேதிச் சமன்பாடு வினாக்கள் மற்றும் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல, தீர்வு காணும் கணக்குகளும் கேட்கப்பட்டிருந்தது. நெடு வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. தொடர் பயிற்சி காரணமாக, அனைத்து வினாக்களுக்கும் எளிதாக பதில் எழுத முடிந்தது.


ஆர்த்தி: கணக்குப்பதிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் கட்டாய வினாக்கள், பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் உரிய நேரத்திற்குள் பதில் எழுத முடிந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.


மாயா: கணக்குப்பதிவியல் பாடத்தில் மூன்று மதிப்பெண் வினாக்களும், நெடுவினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தது. தொடர்ந்து திருப்புதல் தேர்வை எழுதியதால், பொதுத்தேர்வை எளிதாக எழுத முடிந்தது. அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் பதில் எழுதியுள்ளேன். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.


முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி மாணவி ஜேன்ஜோவினா: கணக்குப்பதிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியில் முழு மதிப்பெண்கள் பெற முடியும். இரண்டு மதிப்பெண்கள், கட்டாய வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. பொதுவாக அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது.


அகல்யா: வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டும் சற்று சவாலாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் பதில் எழுதியுள்ளதால், அதிக மதிப்பெண்கள் கிடைக்கப் பெறும்.


கோகுல்: வேதியியல் தேர்வுக்கு தீவிர பயிற்சில் ஈடுபட்டிருந்தேன். வினாத்தாளை வாங்கி பார்க்கும்போது, அனைத்து பகுதிகளும் மிக எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.


உடுமலை


பிளஸ் 1, வேதியியல், கணக்குப்பதிவியல் பாடத்தேர்வுகள் குறித்து, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:


பவதாரணி: கணக்குப்பதிவியல் தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தோம். அதேபோல், வினாக்கள் எளிமையாக இருந்தது. விடைகளை விரைவாக எழுத முடிந்தது. ஈஸியாக அதிக மதிப்பெண் பெற முடியும். மூன்று மதிப்பெண் வினாவில் மட்டுமே, ஒன்று பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டது. ஆனால் விடை எழுதும் வகையில் தான் இருந்தது.


ரெங்கநாயகி: கணக்குப்பதிவியல் தேர்வு சுலபமாக விடை எழுதும் அளவில் இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியில் ஒரு வினாவும், மூன்று மதிப்பெண் பகுதியில் ஒன்றும் சிறிது குழப்பும் வகையில் இருந்தது. ஆனாலும், கடினமாக இல்லை. எளிமையான வினாத்தாளாகதான் இருந்தது.


மரியா: வேதியியல் தேர்வு ஓரளவு எளிமையாக இருந்தது. மூன்று மதிப்பெண் பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் சிறிது கடினமாக இருந்தன. பொறுமையாக யோசித்தால் விடை எழுத முடியும். பள்ளிகளில் பயிற்சித்தேர்வுகள் வைத்தால் எளிதில் விடை எழுத முடிந்தது.


சந்தியா: வேதியியல் தேர்வில், மூன்று மதிப்பெண் வினாப்பகுதியில், சில வினாக்கள் குழப்பமானதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதிகளிலும் பல வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இருப்பினும் எளிமையான வினாத்தாளாகவே இருந்தது. விடை எழுத அதிக நேரம் தேவைப்பட்டது.


ரம்யா: வேதியியல் தேர்வு ஓரளவு எளிமையாக இருந்தது. முந்தைய தேர்வு வினாக்கள், பயிற்சி தேர்வுகளிலிருந்து குறிப்பிட்ட வினாக்கள்தான் கேட்கப்பட்டிருந்தன. பாடப்பகுதிகளின் உள்ளிருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், முதலில் குழப்பமாக இருந்தது. பதட்டமில்லாமல் அடுத்தடுத்த பகுதி வினாக்களை பார்த்தவுடன், ஓரளவு நிம்மதியாக இருந்தது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us