எதிர்பார்ப்பும், இயல்புத்தன்மையும் வேவ்வேறானவை | Kalvimalar - News

எதிர்பார்ப்பும், இயல்புத்தன்மையும் வேவ்வேறானவை

எழுத்தின் அளவு :

தாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அறிவாற்றல் இல்லாததால், குழந்தைகள் மீது வெறுப்பை காண்பிக்கும் பெற்றோரும், பெற்றோரின் அழுத்தத்தால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகளும் இருக்கக் காரணம் என்ன

தங்களது எதிர்பார்ப்பிற்கும், இயல்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பெற்றோர் உணராததே.

தங்கள் பிள்ளை டாக்டராக வேண்டும், ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று கனவு காண்பதில் தவறில்லை. அதேக் கனவை உங்கள் குழந்தையும் காண வேண்டும் என்று வற்புறுத்துவதும், அது நிறைவேறாது என்று தெரிந்தால் குழந்தை மீது வெறுப்பை காண்பிப்பதும் தவறாகும்.

ஒரு குழந்தை ஒரு வயது முதலே ஒவ்வொரு வார்த்தைகளாக உச்சரிக்க ஆரம்பிக்கும். குழந்தைகள் தாங்கள் காதில் கேட்கும் சத்தத்தை உச்சரிக்க முயல்கின்றன. தாத்தா என்று எளிதாக உச்சரிக்கும் ஒரு குழந்தையிடம், தா என்று நாம் உச்சரிக்கக் கூறினால் அது உச்சரிக்காது. எந்தக் குழந்தையையும் நம்மால் ஒரு செயலையோ, பேசுவதையோ செய்ய வைக்க முடியாது. ஆனால் அழ வைக்க முடியும். இதைத்தான் பல பெற்றோர்கள் செய்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.

நாம் பாடும் பாடல்களையும், டிவியில் பார்க்கும் நடன அசைவுகளையும், வார்த்தைகளையும் நம்முடன் இருக்கும் போது செய்யும் குழந்தை, நமது உறவினர்கள் முன்னிலையில், ஒரு பாடல் பாடச் சொன்னால் பாடாது. அப்போது அந்தக் குழந்தை மீது நமக்கு கோபம் வரும். என் குழந்தை அழகாக பாடுவாள் என்று சொன்னோமே, இவள் பாடாமல் இருக்கிறாளே என்று கோபம் கொள்ளக் கூடாது. நம் குழந்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை ஒரு விஷயத்தை கணித்துப் புரிந்து கொள்வதிலும், மற்றொரு குழந்தை புரிந்து கொள்வதிலும், நேரம், முறை வேறுபடும். ஒரு சில குழந்தைகள் விரைவிலேயே எளிதாக புரிந்து கொள்ளும். மற்ற குழந்தை சற்று நேரம் எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் விளக்கிக் கூறினால்தான் புரிந்து கொள்ளும்.

என் குழந்தையும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று எல்லா பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் அதற்கான திறன் இருப்பதில்லை. நம் குழந்தைக்கு உள்ள திறனுக்கேற்ப ஒரு விஷயத்தை கற்பிக்க வேண்டும். நமது குழந்தையின் கல்வித் திறனை ஊக்குவிக்க வேண்டும். அவனுக்கு எது எளிதான முறை, அவன் எப்படி கற்பித்தால் புரிந்து கொள்கிறான், ஒரு விஷயத்தை எத்தனை முறை படித்துக் காண்பித்தால் விளங்குகிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவனுக்கு கற்பிக்க வேண்டும்.

நம் குழந்தைக்கு என்ன வரும், அவனுக்குள்ள கல்வித் திறன் என்ன என்பதை ஒரு பெற்றோர் இயல்பாக புரிந்து கொண்டு அவனுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து, நமது பண வசதிக்கு டாக்டராக்க வேண்டும் என்று அறிவியல் வாடையே பிடிக்காத பிள்ளையை மருத்துவப் படிப்பில் சேர்ப்பது அவனது எதிர்காலத்தை குருடாக்குவதாகும்.

தனது கல்வித் திறனை விட அதிகப்படியான திறன் தேவைப்படும் படிப்பில் சேரும் மாணவர், படிப்படியாக படித்து முன்னேறுவது நல்ல விஷயம்தான். ஆனால் அனைவரையும் விட பின்தங்கி, நம்மால் இது முடியாது என்று பின்னோக்கி ஓடினால் அது எதிர் விளைவுகளையல்லவா தந்து விடும்.

குழந்தையின் கல்வித் திறனை புரிந்து கொண்டு அவனது கனவை அவனையே காண விடுங்கள். அவனது கனவை நனவாக்கும் பொறுப்பை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us