புள்ளியியல் நிபுணர் | Kalvimalar - News

புள்ளியியல் நிபுணர்

எழுத்தின் அளவு :

வியாபாரம் மிகுந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில், பொருட்களை வாங்கிவிட்டு, கேஷியரிடம் சென்றால், அவர் அவசரமாக நீங்கள் வாங்கிய அனைத்துப் பொருட்களையும் ஸ்கேன் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இந்த டிஜிட்டல் டேட்டாவானது சரியாக பகுப்பாய்வு(analyse) செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம், லாபமடைவதற்கு பேருதவியாக இருக்கும். இந்த இடத்தில்தான், புள்ளியியல் நிபுணர் உள்ளே வருகிறார். அவர் டேட்டா பதிவுகளை ஆராய்கிறார்.

அனலிடிகல் நிபுணராக உருவாதல்

டேட்டாவிற்கு அர்த்தம் கொடுத்து அதை முக்கியத்துவப்படுத்துவதே ஒரு புள்ளியியல் நிபுணரின் நோக்கம். புள்ளியியல் செய்முறைகளைப் பயன்படுத்தி, டேட்டா தொகுப்புகளை, பலவிதமான விபரங்கள் வைத்து விளக்கி, ஒரு மதிப்புவாய்ந்த தகவலை உருவாக்கும் பணியை, புள்ளியியல் நிபுணர் செய்கிறார். எண்களை, அறிவு வடிவில் அவர் மொழிபெயர்க்கிறார்.

உதாரணம் கூறவேண்டுமெனில், மருத்துவ துறையை எடுத்துக்கொண்டால், ஒரு குறிப்பிட்ட மருந்து வெற்றிகரமாக வேலை செய்கிறதா என்பதை அறிந்துகொள்ளுவது எப்படி? மற்றும் எத்தனை பேர் புகைப்பிடிக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்துகொள்வது? இந்த விவரங்களை சேகரிக்க நாம் புள்ளியியலுக்குள் நுழைய வேண்டும். இதன்மூலம் நீங்கள் சரியான முடிவுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

புள்ளியியல் பகுப்பாய்வு என்பது, ஆராய்ச்சி தொடர்பான முடிவெடுத்தல் செயல்பாட்டிலும், தொழில்துறை திட்டமிடுதலிலும், கொள்கை வகுப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

புள்ளியியல் பயன்பாடுகள்

பல மாணவர்கள், புள்ளியியல் பாடத்தை, கணிதம் மற்றும் கம்ப்யூடேஷன் பாடங்களுடன் மட்டும் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். ஆனால் நடைமுறையில், புள்ளியியல் என்பது வெறுமனே கணிதம் தொடர்பானது மட்டுமல்ல, இதன் பயன்பாடு பல்வேறான துறைகள் தொடர்புடையது. இத்துறையானது, இயற்பியல் அல்லது வேதியியல் துறையைப் போன்றதல்ல. ஏனெனில், அத்துறைகளில் ஈடுபடும் ஒருவர், அது சார்ந்த சிக்கல்களை தீர்க்கும் பணிகளில் மட்டுமே ஈடுபடுகிறார். ஆனால், புள்ளியியல் என்பது, பிற துறைகளின் பிரச்சினைகளையும் தீர்க்க பயன்படுகிறது.

பிற துறைகளின் நபர்களோடு விவாதித்து, அவர்கள் தெளிவான முடிவுகளைப் பெற, இந்த புள்ளியியல் நிபுணர் உதவியான இருக்கிறார். பல வேளாண் விஞ்ஞானிகள், சேகரித்த தரவுகளுடன், புள்ளியியல் நிபுணர்களை, தீர்வுகளைப் பெறுவதற்கான நாடிச் செல்கின்றனர். புள்ளியில் புரிதல் இல்லாமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதானது, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், ஒருவர் மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. புள்ளியில் பட்டம் பெற்ற ஒருவர், பொருளாதாரம், நிதி, ஐ.டி., உற்பத்தி மற்றும் வேளாண்மை போன்ற பல்வேறான துறைகளில் பணிபுரிய முடியும்.

இத்துறையில் நுழைய...

பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்த ஒரு மாணவர், புள்ளியியல் துறை படிப்பை மேற்கொள்ளும் தகுதியைப் பெறுகிறார். பொதுவாக, அனைத்து பாரம்பரிய பல்கலைகளும், இளநிலை பட்ட நிலையிலிருந்து, புள்ளியியல் படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம், கொல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம்தான், இப்படிப்புக்கு, புகழ்வாய்ந்த ஒன்றாகும். இக்கல்வி நிறுவனத்தில், B.Stat., (Hons) மற்றும் M.Stat., ஆகிய படிப்புகளில் சேர, எழுத்துத் தேர்வை எழுத வேண்டும்.

ஒருவர் இரண்டு விதமான புள்ளியியல் அறிவைப் பெற முடியும். Pure statistics அல்லது அப்ளைடு புள்ளியியல்தான் அவை. கல்லூரிகளைப் பொறுத்தவரை, பொதுவாக, Pure, அதாவது தியரி தொடர்பான புள்ளியியல் படிப்புகளில்தான் கவனம் செலுத்துகின்றன. ISI, IIT(Kanpur, Mumbai), CR Rao institute of advanced statistics(Hyderabad), Centre for advanced studies(Pune university) போன்றவை, இப்படிப்புகளுக்கான குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்கள்.

அதேசமயம், IASRI - Delhi, National institute of medical statistics and International institute of population studies போன்ற கல்வி நிறுவனங்கள், புள்ளியியல் துறையின் நடைமுறை பயன்பாட்டு அம்சத்தின்பால் கவனம் செலுத்துகின்றன. IASRI கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரமானது, ஆச்சர்யப்படத்தக்க வகையில் உள்ளது. 10 மாணவர்களுக்கு கற்பிக்க, 40 ஆசிரியர்கள் உள்ளனர்.

இக்கல்வி நிறுவனத்தில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதுடன், எம்.எஸ்சி., படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டிற்கு ரூ.7,560ம், பிஎச்.டி., மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.10,500ம் உதவித்தொகைகளாக வழங்கப்படுகின்றன. விடுதிக் கட்டணமாக, ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் படிப்புகள்

இத்துறையில் முதுநிலை அல்லது பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலையிலான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றை பார்க்கலாம். ISI கல்வி நிறுவனத்தில், M.Stat., படிக்கும் ஒரு மாணவர், advanced probability, quantitative economics, applied statistics, biostatistics, data analysis, mathematical statistics and actuarial science போன்ற விஷயங்களை படிக்கிறார். CSO உடனான, அவரது கல்வி நிறுவனத்தின் கட்டாய ப்ராஜெக்ட்டால், அவர் எச்.சி.எல்., நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெற்றார். அவர் தன் அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார், "அந்நிறுவனத்தில், புள்ளியியல் நிபுணர் எவரும் அப்போதைக்கு பணிபுரியவில்லை.

எனவே, இவரை உள்ளடக்கிய குழுவானது, எச்.சி.எல்., குழுவிற்கு, முடிவுகள் கிடைப்பதற்கான பல்வேறு வழிமுறைகளைப் பெற உதவினோம். அந்நிறுவனத்தின் விஷயங்களுக்கேற்ப, எங்களின் பகுப்பாய்வு உதவியதா என்று HCL மதிப்பிட்டது. நான் ரூ.12,000 உதவித்தொகை பெற்றேன்" என்றார்.

மேலும், முன்கூட்டியே விலை நிர்ணயிக்கும் பணியும், இத்துறை சார்ந்த உற்சாகமான பணிகளில் ஒன்று. காய்கறிகள் போன்ற பொருட்களுக்கு முன்னதாகவே, விலைகள் நிர்ணயிக்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய இரு தரப்பினருக்கும், முடிவெடுக்க வசதியாக இருக்கிறது.

பொதுத்துறை பணி வாய்ப்புகள்

இந்திய வேளாண்மை கவுன்சிலின் கீழ், 97 கல்வி நிறுவனங்கள் மற்றும் 45 வேளாண்மை பல்கலைகள், இந்தியாவில் உள்ளன. வேலைவாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு இந்நாட்டில் குறைவாக உள்ளது. கடந்தாண்டு, 70 புள்ளியியல் நிபுணர்களுக்கான காலிப் பணியிடங்களின் விளம்பர அறிவிப்பை, வேளாண் விஞ்ஞானிகள் பணியமர்த்தும் வாரியம் மேற்கொண்டது. ஆனால், பல புள்ளியில் நிபுணர்களுக்கு, தங்களுக்கான வாய்ப்புகளைப் பற்றி தெரியவில்லை.

ஒரு புள்ளியியல் நிபுணர், அரசுத்துறை பணியில் நுழைய விரும்பினால், வேளாண் விஞ்ஞானிகள் பணியமர்த்தும் வாரியம் மூலமாக வேளாண் ஆராய்ச்சி சேவை அல்லது UPSC மூலமாக இந்திய புள்ளியியல் சேவை(ISS) ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெற முடியும். ISS, முதுநிலை புள்ளியியல் பட்டதாரிகளுக்கு, அரசுத் துறைகளில், பலவிதமான பணி வாய்ப்புகளை வழங்குகிறது. அதற்கான தேர்வை, UPSC நடத்துகிறது.

அத்தேர்வில் தேறிய ஒருவர், தேசிய புள்ளியியல் நிறுவனம், மத்திய புள்ளியியல் நிறுவனம் மற்றும் தேசிய sample அலுவலகம் ஆகியவற்றில் பணிவாய்ப்புகளைப் பெறலாம். மேலும், கை நிறைய ஊதியம் பெறலாம்.

தனியார் துறைகளுக்கான தேவைகள்

புள்ளியியல் துறையில் முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்பை முடித்தவர்கள், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம். இதற்கான ஆரம்ப சம்பளமே 5 முதல் 6 லட்சங்கள். HP, Infosys, HSBC, GE and UN bodies - ICARDA, ICRISAT போன்றவை, சில முக்கிய தனியார் நிறுவனங்ளாகும்.

சவால்கள்

டேட்டாவின் தரம் மிக முக்கியமானது. ஒருசார்பற்ற தரவைப் பெறுவது சவாலானது. புள்ளியியல் ரீதியான நிஜ சிக்கல்களைப் புரிந்து கொள்ளுதல், குறைந்த காலஅளவில், கிடைக்கும் tool -களில் சிறந்தவற்றை பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

புள்ளியியலின் கணித தியரிகளை சிறப்பாக அறிந்திருக்க வேண்டும். கடும் முயற்சி செய்து, அதன்மூலமாக, தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒருவருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. வரும் நாட்களில், மிக அதிகளவு சம்பளம் தரக்கூடிய துறைகளில் ஒன்றாக, புள்ளியியல் துறை மாறும் என்பது நிச்சயம் என்றே, அத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us