எம்.பி.ஏ - மார்க்கெடிங் | Kalvimalar - News

எம்.பி.ஏ - மார்க்கெடிங்

எழுத்தின் அளவு :

எம்.பி.ஏ., படிப்பவர்களின் கவனத்தை அதிகம் கவரும் ஸ்பெஷலைசேஷன் பிரிவுகளில், மார்க்கெடிங் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சவால்களையும், வளர்ச்சியையும் விரும்புவோருக்கு, மார்க்கெடிங் துறை ஒரு சரியான தேர்வாகும்.

உங்களுக்கு அறவேப் பிடிக்காத ஒரு துறையில் நீங்கள் எப்போதுமே ஈடுபடுதல் கூடாது. ஒருவர், தனக்குப் பிடித்தமான துறையில் கால் பதிப்பதென்பது, சவாலான ஒரு காரியமாக உள்ளது. எனவே, எம்.பி.ஏ., ஸ்பெஷலைசேஷன் தேர்வு செய்கையில், உங்களுக்கு மார்க்கெடிங் ஒத்துவருமா? என்பதைப் பற்றி நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வரவும்.

திறன் மற்றும் மனப்பாங்கு

படைப்புத்திறன், வெளியே செல்ல விரும்பும் மனப்பாங்கு, நல்ல தலைமைப் பண்பு, எளிதாக பிறருடன் பேசும் தன்மை, சற்று செல்வாக்கு, பேரம் பேசும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் தன்மை, பகுப்பாய்தல் திறன் மற்றும் தரவுகளை விளக்கும் அறிவு ஆகியவற்றைப் பெற்ற ஒருவருக்கு, மார்க்கெடிங் துறை பொருத்தமான ஒன்றாகும். அதேசமயம், இத்தகைய திறன்கள், காலஓட்டத்தில் மேம்படுத்தப்பட்டு, கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.

நமது சிந்தனையில் படைப்பாக்கம் மற்றும் புத்தாக்க முயற்சிகள் அவசியம் வேண்டும். மேலும், உங்களின் பணியில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் இருக்க வேண்டும். அப்போதுதான், மார்க்கெட்டிங் துறையில் உங்களால் ஒரு வெற்றிகரமான நிபுணராக மிளிர முடியும்.

ஆர்வமுள்ள அம்சங்கள்

உங்களுக்கான ஸ்பெஷலைசேஷனை தேர்வு செய்யும் முன்னதாக, உங்களுக்கு எந்தப் பணியில் முழு திருப்தியுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட முடியும் என்பது குறித்து ஒரு உண்மையான சுய ஆய்வை மேற்கொள்வது அவசியம். ஏதோ புறச்சூழல்களால் உந்தப்படாமல், உண்மையாகவே, உங்களின் உள்ளுணர்வின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

அடிக்கடி பயணம் செய்தல், புதிய நபர்களை சந்தித்தல், நெட்வொர்க்கிங், ஆய்வு, வியூகம், product வடிவமைப்பு ஆகிய அம்சங்களில் உங்களுக்கு ஆர்வமிருந்தால்தான், உங்களால் மார்க்கெடிங் துறையில் வெற்றிகரமாக செயல்பட முடியும். மார்க்கெடிங் படிப்பில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளன மற்றும் அந்த அம்சங்களில் உங்களுக்கு பிடித்தவையா என்பதைப் பற்றி, ஸ்பெஷலைசேஷன் தேர்வுக்கு முன்னதாகவே முடிவு செய்தல் முக்கியம்.

நோக்கம்

மார்க்கெடிங் துறை என்பது ஏறக்குறைய, அரசியல் களம் போன்றது. அங்கே, போட்டிகளும், சவால்களும் எப்போதும் மிக அதிகம். சற்று அசந்தாலும், நாம் பின்தள்ளப்படுவோம். அதிகளவிலான பொறுப்புகள், இலக்குகள்(targets), வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவை இத்துறையில் நிறைய உண்டு.

நம்மில் பலர், பணி திருப்தியைவிட, பணத்திற்கும், பணித் தன்மையைவிட பிரபலமான பெயருக்கும், வளர்ச்சியைவிட, பணிப் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எனவே, மேற்கூறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு, மார்க்கெடிங் துறை சரிப்படாது. அதேசமயம், சவால், சுவாரஸ்யம், நல்ல வருமானம் மற்றும் விரைவான வளர்ச்சி ஆகியவற்றை விரும்பும் நபர்களுக்கு, மார்க்கெடிங் என்பது மிகவும் பொருத்தமான ஒரு துறை.

பணி வாய்ப்புகள்

எம்.பி.ஏ., - மார்க்கெடிங் முடித்தவர்களுக்கு, பணி வாய்ப்புகளுக்கு எந்த குறையுமில்லை. சேல்ஸ் டெவலப்மென்ட், மார்க்கெட் ரிசர்ச், மார்க்கெடிங் கம்யூனிகேஷன், மெர்க்கன்டைசிங், விளம்பரம், ப்ராடக்ட் டெவலப்மென்ட், டைரக்ட் மார்க்கெடிங், டிஜிட்டல் மார்க்கெடிங் மற்றும் ஈவென்ட் மார்க்கெடிங் உள்பட பலவிதமான பணி வாய்ப்புகள் காத்துக்கொண்டுள்ளன.

இந்த டிஜிட்டல் யுகத்தில், ப்ராடக்ட் அல்லது பிரான்ட் மார்க்கெடிங், சோஷியல் மீடியா மார்க்கெடிங், கிரீன் மார்க்கெடிங் மற்றும் மாரக்கெடிங் கன்சல்டிங் உள்ளிட்ட சில புதிய பணி வாய்ப்புகள், MBA - Marketing பட்டதாரிகளுக்காக, உருவாகி வளர்ந்து வருகின்றன.

மார்க்கெடிங் என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய துறை. இத்துறையில், Marketing manager முதல் Poster maker பணி வரையிலும், Sales strategist முதல் Product designer பணி வரையிலும், PR முதல் Advertising பணி வரையிலும், Logistics planning முதல் Charmer பணி வரையிலும், பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். உங்களிடமிருக்கும் தனித்தன்மை எதுவோ, அதை பயனுக்கு கொண்டுவந்து, முன்னேறும் வாய்ப்பை இத்துறை நமக்கு வழங்குகிறது.

படிப்புகளும், கல்லூரிகளும்

நீங்கள் தேர்வு செய்யும் மேலாண்மை கல்வி நிறுவனம், ஸ்பெஷலைசேஷன் படிப்புக்கு சிறந்த ஒன்றா என்பதை கவனிக்கவும். குறிப்பிட்ட படிப்பில் இடம்பெறும் தலைப்புகள் மற்றும் பாடத்திட்டங்கள் ஆகியவை, எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்கும் விஷயங்களை கையாள உதவுமா என்பதையும் கவனிக்க வேண்டும். பலவிதமான படிப்புகளில், உங்களுக்குப் பொருத்தமானதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

* MBA - Marketing and Sales (2 years)
* PG Diploma in Management (PGDM - Marketing)
* Master of Marketing management (2 years)

ஆகியவையே அந்தப் படிப்புகள்.

இப்படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்

* IIMs
* IMT, Gazhiabad
* University of Delhi
* Symbiosis institute of Business management, Pune
* Jamnalal Bajaj institute of management studies, Mumbai
* FORE School of management, Delhi
* Indian School of Business, Hyderabad

இப்படிப்பின் அம்சங்கள்

மார்க்கெடிங் ஆராய்ச்சி, வணிக தகவல்தொடர்பு, விற்பனை மற்றும் விளம்பர மேலாண்மை, பிராண்ட் மேலாண்மை, இன்டஸ்ட்ரியல் மார்க்கெடிங் மற்றும் நுகர்வோர் நடத்தை ஆகிய பிரிவுகளில், அட்வான்ஸ்டு நிலையிலான கற்பித்தல் நடைபெறுகிறது.

அதேசமயம், பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மேனேஜ்மென்ட டெவலப்மென்ட் ப்ரோகிராம்கள், கேஸ் ஸ்டடீஸ், ரிசர்ச் ப்ராஜெக்ட்டுகள், வொர்க் ஷாப்புகள், ஸ்டடி குரூப் கருத்தாக்கங்கள், செமினார்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் ப்ரோகிராம்கள் ஆகியவற்றை துணைநிலை கற்பித்தல் அம்சங்களாக கையாள்கின்றன.

வாங்கும் திறன் உள்ளிட்ட நுகர்வோரின் உளவியலை அறிந்துகொள்ளவும், முறைப்படுத்தப்பட்ட சந்தை வியூகங்களை மேம்படுத்தவும், மாணவர்கள், இன்டர்டிசிப்ளினரி பாடங்களில் தயார்படுத்தப்படுகிறார்கள். MBA - Marketing படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, பல நிலைகளில் பணி வாய்ப்புகள் காத்துக்கொண்டுள்ளன.

ஒரு மாணவரின் தகுதிநிலை, சந்தை நிலவரம், படித்த கல்வி நிறுவனம், பணிநிலை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒருவரின் சம்பளம், ஆண்டிற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும் வேறுபடும். மேலும், இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு கிடைக்கும் பொதுவான பணி நிலைகள், Sales/Business development manager, Brand manager, Market research analyst and Product manager போன்றவையாகும்.

MBA - Marketing முடித்த மாணவர்களுக்கு, FMCG, IT, Telecom, Automotive Pharmaceuticals and Banking போன்ற நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளில், நல்ல சம்பளத்துடன், பல சலுகைகளைக் கொண்ட, சிறப்பான பணி வாய்ப்புகளை அளிக்கின்றன.

இத்துறை படிப்பை முடித்த ஒரு மாணவர் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைத்தான். தன்னுடைய முந்தைய அனுபவம் மற்றும் படிப்போடு ஒத்திசைவை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய வகையிலான பணியை, ஒருவர் தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக கூறுவது...

பணியில் ஏதேனும் குறைபாடுகள் நேர்ந்தால், அதை சரிசெய்து, நிலைமையை சமாளிக்கும் வகையில் நமது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் வாழும் உலகம் தினந்தோறும் மாறிக்கொண்டே இருப்பதாகும். எனவே, இதில் ஜெயிக்க வேண்டுமானால், கடும் முயற்சிசெய்து, நமது சுய பலவீனங்களை அகற்றி, புதிய புதிய சூழல்களில் போராட பழகிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ளும் படிப்பானது, உங்களுக்கு வெறுமனே பணி வாய்ப்புகளை மட்டும் தருவதில்லை. மாறாக, விரிவான அறிவு, சிறந்த அனுபவம், தகவல்தொடர்பு படிப்பினைகள் மற்றும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற பல்வேறான நன்மைகளையும் கொண்டு வருகிறது என்பதை மறத்தல்கூடாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us