நியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா? தயவு செய்து விளக்கவும். | Kalvimalar - News

நியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா? தயவு செய்து விளக்கவும். டிசம்பர் 16,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் நமது அன்றாட பழக்க வழக்கங்களே நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன என்பதை இன்று நமது மீடியாக்கள் அனைத்துமே வலியுறுத்துவதைப் பார்க்கிறோம். அன்றாட பழக்க வழக்கங்களில் நமது உணவுக்கு மிக முக்கியமான பங்கு இருப்பதையும் காண்கிறோம். உணவே மருந்து என்ற நமது முன்னோர்களின் கூற்றை ஆய்வு செய்து இன்றைய நவீன வடிவத்தில் துறை வல்லுனர்கள் பல்வேறு முறைகளில் வலியுறுத்துவதையும் பார்க்கிறோம். இதில் கவனமில்லாத வாழ்க்கை முறையை மேற்கொள்பவர்கள் நோய்களால் அவதியுறுவதையும் பார்க்கிறோம்.

நியூட்ரிசன் அண்ட் டயடிக்ஸ் எனப்படும் உணவூட்டம் மற்றும் திட்ட உணவுத் துறையானது கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கும் படிப்பாக மாறியிருக்கிறது. உணவில் உள்ள பல்வேறு சத்துக்களின் விகிதம், நமது உடல் நலத்தில் இவற்றின் பங்கு, அவற்றின் கலவை, தேவைப்படும் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அனைத்தைப் பற்றியும் படிப்பதே இந்தத் துறை. எந்த உணவுப் பொருள் எப்படி ஜீரணமாகிறது என்பதையும் நாம் இதில் அறிய முடிகிறது. இதனால் இன்று இப்படிப்பானது மருத்துவம், கால்நடை அறிவியல், விவசாயம் மற்றும் பொது நலம் ஆகிய துறைகளில் அதிகம் பயன்படும் துறையாக மாறியிருக்கிறது.

இத் துறையில் படிப்பை முடித்து அதில் சிறப்பான திறன் பெற்றிருப்பவர்கள் பொது உடல் நலத்திற்கான அடிப்படை உணவு முறை எப்படியிருக்க வேண்டும் என்பதில் நமக்கு ஆலோசனை தருகிறார்கள். குறிப்பிட்ட நோய் இருப்பவர்கள் எந்த உணவை எடுத்துக் கொள்ளலாம், எதைத் தவிர்க்க வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் போன்றவற்றில் இவர்களின் ஆலோசனையானது நமது உடல்நல மேம்பாட்டிற்கு மிகவும் பயன்தருவதாக இருக்கிறது. சர்க்கரை வியாதி போன்ற தீராத நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள எது மாதிரியான சாப்பாடு தேவை என்பது போன்ற ஆலோசனைகளைத் தருவதும் இவர்கள் தான். இதில் நோயாளிகளின் வயது, நோய், அவர்களின் அன்றாட செயல்முறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்களின் பணி ஆஸ்பத்திரி, பள்ளிகள்,ஓட்டல்களில் இன்று பெரிதும் பயன்படுவதாக இருக்கிறது.

நிர்வாக டயட்டீசியன்கள்:பெரிய அளவில் சாப்பாடு தேவைப்படும் இடங்களான பள்ளிகள், தொழிற்சாலை கேன்டீன்கள் ஆகியவற்றில் உணவு திட்டமிடும் பணியில் இருப்பவர்களை நிர்வாக டயட்டீசியன்கள் என அழைக்கிறார்கள். உணவுக்கான ஆதாரங்களை தேர்வு செய்வது, பட்ஜெட் தயாரிப்பது, உபகரணங்களை வாங்குவது, பாதுகாப்பு முறைகளை உறுதி செய்வது, ஆவணங்களை தயார் செய்து பராமரிப்பது போன்ற பணிகள் இவர்களுடையது தான். கிளினிகல் டயட்டீசியன்கள்: உடல்நல மையங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் நர்சிங்ஹோம்கள் ஆகியவற்றில் இருப்பது இவர்கள் தான். நோயாளிகளின் உணவுத் தேவைக்கேற்ப டயட் சார்ட்களை தயாரித்து டயட்டினால் நோயாளிகளின் உடல்நலம் மேம்படுவதை கண்காணிப்பது இவர்கள் பணி. ரிசர்ச் டயட்டீசியன்கள்:உடல் நலத்திற்கான உணவு திட்டத்தை ஆய்வு செய்வது உருவாக்கி ஆலோசனை தருவது இவர்கள் தான்.

விண்வெளி பயணம் போன்றவற்றில் நமது உடலுக்குத் தேவைப்படும் உணவைக் கூட இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். கிளினிக்குகளிலும் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரியும் நியூட்ரிசியன்களும் டயட்டீசியன்களும் குறிப்பிட்ட கால அளவு அட்டவணையில் பணி புரிகிறார்கள். சிலரது பணியானது வார இறுதியிலும் தேவைப்படுவதால் அது போன்ற கால அட்டவணைகளிலும் பணி புரிவதையும் நாம் காணலாம். உணவுத் துறையில் பணி புரிபவர்களும் கூட இது போன்ற நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் பணி புரிகிறார்கள்.

அடிப்படையில் உணவு மற்றும் டயட் போன்றவற்றில் அடிப்படையில் ஆர்வம் இருப்பர்கள் இதில் பணி புரிந்தால் சிறப்பான பெயர் பெறுவார்கள். மேலும் நல்ல தகவல் தொடர்புத் திறன் மற்றும் பொறுமை போன்ற குணங்களும் இருந்தால் இன்னமும் கூட பிரகாசிக்கலாம்.

பொதுவாக பட்டப்படிப்புக்குப் பின் படிக்கக் கூடிய எம்.எஸ்சி படிப்பாகவே நியூட்ரிசன் படிப்பு இருக்கிறது. மைக்ரோ பயாலஜி, வேதியியல், ஹோம்சயின்ஸ், மருத்துவம், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி படித்தவர்கள் இதில் அதிக எண்ணிக்கையில் சேருகிறார்கள். இது தவிர ஒரு ஆண்டு பி.ஜி. டிப்ளமோ படிப்பாகவும் இதைப் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us