மேற்கத்திய இசை ஆர்வமுடையோருக்கான பரவலான வாய்ப்புகள் | Kalvimalar - News

மேற்கத்திய இசை ஆர்வமுடையோருக்கான பரவலான வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

பல இளைஞர்களுக்கு, அது இந்திய பாரம்பரிய இசையாகவோ அல்லது மேற்கத்திய இசையாகவோ இருக்கட்டும், இசை கற்பது ஒரு பொழுதுபோக்கான அம்சமாகவே இருக்கிறது. வாய் பாட்டு அளவிலோ அல்லது இசைக்கருவி அளவிலோ, ஒருவர் சிறந்து விளங்கி பலரது பாராட்டையும் பெறும்போது மட்டுமே, அவர் இசைத்துறையை தனது முழுநேரத் தொழிலாக தேர்ந்தெடுக்கிறார். ஆனால், சமீப காலங்களில், நிலைமை வெகுவாக மாறிவிட்டது.

மேற்கத்திய இசையைப் படிக்கும் ஆர்வம், இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது மற்றும் நல்ல தரமான அமைப்பாக்கப்பட்ட முறையிலும், அங்கீகரிக்கப்பட்ட வகையிலும், மேற்கத்திய இசைக் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களும், நாட்டில் கணிசமான அளவில் உள்ளன. எனவே, திறமையும், ஆர்வமும் உள்ள மாணவர்கள், இசைத் துறையில் சாதித்து, வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிகள் நிறைந்துள்ளன.

ஒத்துழைப்புகள், கூட்டிணைப்புகள், இரட்டைப் பட்ட படிப்புகள், சர்வதேச அளவிலான ஆசிரியர்கள் ஆகிய அம்சங்களால், மாணவர்கள் சிறந்த இசையறிவைப் பெற்று, தங்களின் திறனை நிரூபிக்கும் வழிகள் நிறைந்துள்ளன.

இளைய தலைமுறையினரை கவரும் முக்கிய தொழில்களில், இசைத் தொழிலும் ஒன்று என்ற அளவில், இன்றைய சூழல் திகழ்கிறது. சென்னை அருகே அமைந்திருக்கும் ஸ்வர்ணபூமி மியூசிக் அகடமியில்(SAM) பழைய முறையிலான குருகுல கல்விமுறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில், ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரே வளாகத்தில் தங்கியிருந்து, ஒன்றாக உண்பார்கள். மேலும், நல்ல பாடத்திட்டம் மற்றும் தரமான ஆசிரியர்கள் போன்றவைகளுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுதவிர, அமெரிக்காவிலுள்ள McNally Smith College என்ற இசைக் கல்வி நிறுவனத்துடனும் SAM ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. இங்கு Music performance -ல் டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகிறது.

Academy of Western Music (AWM) இசைக் கல்வி நிறுவனத்தில், இசைக் கருவிகள், வாய்ப்பாட்டு, தியரி மற்றும் இசைத் தயாரிப்பு ஆகிய நிலைகளில், மேற்கத்திய இசை கற்றுத்தரப்படுகிறது. மேற்கத்திய இசைத்துறை இந்தியாவில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அதைப் பிரபலப்படுத்தும் வகையில், இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சினிமா இசைக்கு வெளியே...

SAM இசைக் கல்வி நிறுவனத்தில், மாணவர்களுக்கு, உலகின் பலதரப்பட்ட இசைக் குறித்தும் அறிமுகம் கிடைக்கிறது. உலகளாவிய அளவில் ஒரு இசைக் கலைஞராக உருவாகும் வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன்மூலம், இசை தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்திய இசைக் கலைஞர்கள், தங்களுக்கான ஒரு குறிப்பிட்ட வகை ரசிகர்களை கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கான பல்வேறு வழிகளை இணையதளம் வழங்குகிறது. அதேசமயம், ஒவ்வொரு விதமான இசைக் கலைஞருக்கும் வேறுபட்ட நிலைகள் உள்ளன. ஒரு ராக் இசைக் கலைஞர், சினிமா இசைக் கலைஞரைப் போன்று சம்பாதிக்க மாட்டார்.

AWM கல்வி நிறுவனம், இசைக் கலைஞர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய, இசைத் தயாரிப்பு தொடர்பான குறுகியகால படிப்பை வழங்கவுள்ளது. ஒரு இசைக் கலைஞருக்கு, சினிமா, விளம்ரம் மற்றும் கற்பித்தல் ஆகிய துறைகளையும் தாண்டிய பணி வாய்ப்புகள் உள்ளன. இசையின் வணிகம் பற்றி அறிந்துகொள்வது இன்றைய நிலையில் அவசியமான ஒன்று. ஸ்டுடியோ மற்றும் இசைக்குழுவை நிர்வாகம் செய்வது ஒரு தனிப்பட்ட மேலாண்மை திறனாகும்.

எனவே, இசை அறிவோடு, மேலாண்மைத் திறனையும் கொண்டிருக்கும் ஒருவர், உலகளாவிய அளவில் தனக்கான வாய்ப்புகளைத் தேட முடியும். அதேசமயம், இசைத்துறை வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு, இளைஞர்களின் மத்தியில் குறைவாகவே உள்ளது. பலரும், திரை இசைப் பற்றியும், அதில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால், அதைத் தாண்டி இசைத்துறையில் பலவிதமான வாய்ப்புகள் உள்ளன.

கற்பித்தல் வாய்ப்புகள்

இசைக் கலைஞர்களுக்கென இருக்கும் வேலை வாய்ப்புகள் குறைவு என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அது தவறு. இசை என்பது சமூகத்தின் ஒரு உள்ளடங்கிய அம்சம். எனவே, அதற்கென பல வேலை வாய்ப்புகள் சமூகத்தில் உருவாகிக் கொண்டுள்ளன. Playback முதற்கொண்டு, Sound Engineering வரை பலவிதமான பணி வாய்ப்புகள் இத்துறை வல்லுநர்களுக்கு இருக்கின்றன.

முக்கியமாக, இன்றைய இன்டர்நெட் யுகத்தில், மேற்கத்திய இசை மீதான ஆர்வம் நமது தலைமுறையினரிடையே அதிகரித்து வருவதால், மேற்கத்திய பாரம்பரிய இசையைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கான தேவை இன்று அதிகளவில் உள்ளது. மேற்கத்திய இசையில், பியானோ மற்றும் வாய்ப்பாட்டு தொடர்பாக பயிற்சியளிக்க, போதிய எண்ணிக்கையில் தரமான ஆசிரியர்கள் கிடைக்காத பற்றாக்குறை நிலவுகிறது என்பதை மறத்தல் கூடாது.

கிரேடிங் தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி பயிற்சியளிக்கும் இசை ஆசிரியர்கள், அதிகரித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறும் நிலை உருவாகியுள்ளது.

ஏதேனுமொரு கிளாசிக்கல் இசையில் நிபுணத்துவம் பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இதற்கு அதீத அர்ப்பண உணர்வும், கடின முயற்சியும் அவசியம். சென்னையில், இசைப்பள்ளிகள் நிறைந்துள்ளன. மேற்கத்திய இசையில் பயிற்சிபெற்ற ஒருவர், தனி இசைக் கலைஞராகவோ, ஆர்கெஸ்ட்ராக்களிலோ, ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களிலோ, கற்பித்தல் தொழிலிலோ, கம்போசிங் பணியிலோ, இசை தொடர்பான கட்டுரைகளை எழுதுவதிலோ மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதிலோ பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

இசைத் தொடர்பான தொழிலில் நல்ல வருமானம் ஒருபுறம் என்றாலும், அதில் கிடைக்கும் திருப்தியும், நிறைவும் மற்றும் கற்றல் வாய்ப்புகளும் கவனிக்கத்தக்கவை. இசைக் கலைஞர்கள், ஒரு குறுகிய வட்டத்திலேயே தங்களை நிலைநிறுத்திக் கொண்டால், நல்ல வருமான வாய்ப்புகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, அவர்கள் தங்களின் வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கான ரசிகர் வட்டத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும். அன்றாடம், இசை உலகில் நடக்கும் மாற்றங்களை தவறாமல் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். கோபத்துடனும், பிடிவாதமாகவும் இருப்பதைவிட, நம்மை தன்மை மாற்றம் செய்துகொள்ளும்போது, நமக்கு கிடைக்கும் வெற்றி பெரிதாக இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us