கோரியோகிராபி : அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை! | Kalvimalar - News

கோரியோகிராபி : அழகியலை உடல்மொழியில் வெளிப்படுத்தும் கலை!

எழுத்தின் அளவு :

கலைநயத்துடன் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உடலியல் செயல்பாடுதான் நடனம்! ஒரு நடன நிகழ்ச்சி நம்மை மகிழ்விக்கிறது என்றால், அது பல நாட்கள் முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தீவிர பயிற்சி செய்யப்பட்டு, தயார் செய்யப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கோரியோகிராபர் என்பவர் யார்?

ஒரு நடனத்தை வடிவமைக்கும் செயல்பாடுதான் கோரியோகிராபி எனப்படும். ஒரு நடனத்தின் அசைவுகள், அமைப்புகள் ஆகியவற்றை திட்டமிட்டு, தொடர்ச்சியாக அமையும் வகையில் ஒரு நடன செயல்பாட்டை அமைத்து, அதை, பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாய் உருவாக்குபவர்தான் கோரியோகிராபர்.

ஒரு கோரியோகிராபரின் மனதில் தோன்றும் எண்ணம் அல்லது மூளையில் உதிக்கும் விஷயங்களை, நேரடியாக பார்க்கும் வகையில் உருவாக்கும் கலைதான் கோரியோகிராபி.

இத்துறைக்கு தேவைப்படும் திறன்கள்

ஒழுக்கம் அல்லது கட்டுப்பாடு
படைப்புத்திறன்
நடன நுட்பங்கள்
தலைமைத்துவ பண்புகள்
பொறுமை
உடல் கட்டுமானத் தகுதி
பலவிதமான எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைக் கொண்டிருத்தல்
சிறந்த மன ஒருங்கிணைப்புத் திறன்
திடத்தன்மை
கடினமான சூழல்களிலும் பணியாற்றும் தன்மை
ஆர்வம்

கோரியோகிராபரின் பொறுப்புகள்

* அனைத்து வகையான நடனங்களுக்கும் கோரியோகிராபி அமைப்பதோடு, நடனங்களின் வெவ்வேறான மாதிரிகள் மற்றும் வகைகளுக்கு ஏற்ப பணிபுரிதல்.

* தியேட்டர்கள் மற்றும் நடன அமைப்புகளுடன் பணிபுரிந்து, நீங்கள் எங்கே பணிபுரிகிறீர்களோ, அதை பிரபலப்படுத்துதல்.

* ஒத்திகைகள், விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள், பிரசன்டேஷன்கள் மற்றும் சந்திப்புகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளுதல்

* நடனத்தின் அனைத்து அம்சங்களும், முறையாக ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்தல்

* சக நடனக் கலைஞர்களிடம் பொறுமையாக நடந்து, சூழலை செம்மையாக்க உதவுதல்

* நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு அசைவையும் விரிவாக திட்டமிட்டு, அவைகளை ஒருங்கிணைத்தல்

* ஒரு நடனக் காட்சி, இறுதியாக அரங்கேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, அதைப்பற்றிய ஒரு நேர்மறை சிந்தனையை, பங்கேற்பாளர்களிடம் உருவாக்குதல் மற்றும் அதுதொடர்பான சிறப்பான ஏற்பாட்டினை மேற்கொண்டிருத்தல்

எங்கே படிக்கலாம்?

இந்தியாவில் இதுதொடர்பாக பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், சில அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மட்டும் இங்கே தரப்படுகின்றன. அவை,

மைசூர் பல்கலை - மைசூர்
நாடக் இன்ஸ்டிட்யூட் ஆப் கதக் அன்ட் கோரியோகிராபி - பெங்களூர்
சங்கீத் நாடக் அகடமி - டில்லி
நடனம் மற்றும் இசைக்கான அரசுக் கல்லூரி - ஒடிசா

பணித் தன்மை

தனி கலைஞர்களுக்கான அங்க அசைவுகளை உருவாக்குதல் மற்றும் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், கதை வடிவிலான இசை, நடன நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

கோரியோகிராபர்கள், தற்போது வழக்கிலுள்ள நடனத்திற்கான அங்க அசைவுகளை உருவாக்குவதோடு, அவற்றை மறுஆய்வு செய்தல் மற்றும் ஒன்றிணைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.

ஒரு வயதை அடைந்த பின்னர், அதற்குமேல் நடனமாட முடியாது என்ற நிலை வரும்போது, நடனக் கலைஞர்கள் கோரியோகிராபி துறைக்கு வருகிறார்கள். இசையை தேர்வுசெய்தல் மற்றும் டிசைன் மற்றும் தாக்கங்கள் ஆகியவற்றை முடிவு செய்வதற்காக, இயக்குநர்களோடு இணைந்து கோரியோகிராபர்கள் பணிபுரிகிறார்கள்.

நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு உதவும் பொருட்டு, ஒத்திகைகளிலும் கோரியோகிராபர்கள் பங்கேற்கின்றனர்.

ஒரு புரடக்ஷனை ஆராய்ச்சி செய்தபிறகு, கோரியோகிராபர்கள், ஒரு புதிய நடன அசைவை உருவாக்கும் பணியிலோ அல்லது இருப்பவற்றில் மாற்றம் செய்யும் பணியிலோ ஈடுபடுகிறார்கள்.

மேலும், சில நேரங்களில், புதிய அசைவுகளை உருவாக்கும் பொருட்டு, கூடுதல் ஆய்வுகளிலும் ஈடுபடுகிறார்கள். சில கோரியோகிராபர்கள், கலைஞர்களுக்கு கற்றுத்தரும் வகையில், அசைவுகளை வரைகிறார்கள்.

சம்பளம்

இந்திய நிலவரப்படி, ஒரு கோரியோகிராபரின் சம்பளம், ஆண்டிற்கு 5 முதல் 6 லட்ச ரூபாயிலிருந்து, 15 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வேறுபடுகிறது. புரடக்ஷன், கோரியோகிராபியின் காலஅளவு, மீடியா நிறுவனம், டான்சர்களின் எண்ணிக்கை, பப்ளிகேஷன், தொழில்துறை செலவினங்கள், நிறுவனத்தின் பெயர் மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட பல அம்சங்கள், ஒரு கோரியோகிராபரின் சம்பளத்தை நிர்ணயிக்கின்றன.

ஒரு கோரியோகிராபரின் கடின உழைப்பு மற்றும் இதர அம்சங்கள் ஆகியவைதான், அவரின் சம்பளத்தை தீர்மானிக்கின்றன. தங்களுக்கான யூனியனில் உறுப்பினராக இருக்கும் ஒரு கோரியோகிராபர், ஓய்வு நிதி மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகிறார். ஆனால், அவ்வாறு உறுப்பினராக இல்லாத ஒருவர், தனக்கா ன பின் தேவைகளை, தான்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்.

பணி

* கதை மற்றும் இசை குறித்து நன்கு அறிந்துகொண்டு, எண்ணங்களையும், மன ஓட்டத்தையும் எவ்வாறு நடன வடிவில் வெளிப்படுத்துவது என்பதை முடிவு செய்தல்

* கோரியோகிராபியின் மாதிரிகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றின் தொழில்நுட்ப புரிந்துணர்வைப் பயன்படுத்தி, நடன அசைவுகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப அம்சங்களை பதிவுசெய்தல்.

* பாரம்பரிய நடனங்களை மீண்டும் அரங்கேற்றுதல், நடன நிறுவனங்களில் பணியாற்றுதல் மற்றும் புதிய நடன விளக்கங்களை உருவாக்குதல்

* நடனக் கலைஞர்களுக்கு, நடன அசைவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்க ஒத்திகைகளை நடத்துதல்.

இத்துறை வாய்ப்புகள்

தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற எதிர்கால தொழில்துறை எது என்று முடிவுசெய்யும் பெற்றோர்களில் பெரும்பாலானோருக்கு, கோரியோகிராபி என்பது விருப்பமான ஒன்றாக இருப்பதில்லை. ஆனால், நல்ல படைப்புத்திறன், நடனத்தில் அபார ஆர்வம், கலை மற்றும் சினிமாத்துறையில் ஈர்ப்பு உடைய மாணவர்களில், இத்துறை வேண்டாம் என்ற எதிர்ப்புகளை உடைத்தெறிந்து வெளிவரும் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே, கோரியோகிராபி துறையில் நுழைகிறார்கள்.

நாட்டில், பல பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள், கோரியோகிராபி தொடர்பான படிப்புகளை வழங்குகின்றன. நல்ல கிரியேட்டிவிட்டி உள்ள மாணவர்களுக்கு, கோரியோகிராபி என்பது அபரிமிதமான சம்பளத்தையும், வாய்ப்புகளையும் வழங்கும் துறையாகும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us