பாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா? இதன் வேலை வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா? இதன் வேலை வாய்ப்புகள் எப்படி? மே 11,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றம் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம். இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.

எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ. பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத் துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இத் துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்டு டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன. பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த இன்கிரிமென்ட், படிகள், பயன்கள் என பல வகைகளிலும் பாலிமர் இன்ஜினியர்களின் ஊதியம் சிறப்பாக அமைகிறது. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

அனுபவம், தகுதி, திறன்கள் ஆகியவையே இத் துறையில் நல்ல சம்பளம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. பொதுவாக பொதுத் துறையில் பணி புரிபவர்களை விட தனியார் துறையில் பணி புரிபவருக்கே நல்ல சம்பளம் இத் துறையில் கிடைக்கிறது. இத் துறையில் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணி புரியும் சீனியர் பாலிமர் இன்ஜினியர் மற்றும் சயின்டிஸ்டுகள் மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டிக்கள், என்.ஐ.டிக்கள், மெஸ்ராவிலுள்ள பிட்ஸ், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், தொடுபுழா போன்றவற்றில் இத் துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us