நவீன மருத்துவமும், வாய்ப்புகளும்! | Kalvimalar - News

நவீன மருத்துவமும், வாய்ப்புகளும்!செப்டம்பர் 07,2022,17:40 IST

எழுத்தின் அளவு :

சமீப காலங்களில் விஞ்ஞானம் பன்மடங்கு வளர்ச்சியை கண்டுவருகிறது. குறிப்பாக, மருத்துவ துறையின் அனைத்து பிரிவுகளிலும் அதிக மாற்றங்களும், முன்னேற்றங்களும் நடந்துவருகின்றன. 



ஒரு நாட்டின் வளர்ச்சியை பறைசாற்றும் ஒரு முக்கியமான குறியீடு அந்நாட்டின் சுகாதாரத்துறை. நமது நாடு மருத்துவ சுற்றுலாவிற்கு உகந்த நாடுகளுக்குள் ஒன்றாக முன்னேறியுள்ளது. குணப்படுத்த முடியாத நோய்கள் என்பது இன்று மிக குறைவு என்று பறைசாற்றும் வகையில் மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.



சிறந்த அறுவை சிகிச்சை முறையை எடுத்துக் கொண்டோமேயானால் பல காலங்களுக்கு முன்பே 'லேபராஸ்கோப்’ அறுவை சிகிச்சைக்கு நாம் முன்னேறி விட்டோம். இது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தசைகளுக்கு குறைவான சேதம் அளிக்கும் சிகிச்சை முறை. சிறிய கீரல், குறைந்த வலி மற்றும் விரைவான மீட்பு ஆகிய காரணங்களினால் நோயாளிக்கும் சிறந்த பலனை இந்த அறுவை சிகிச்சை முறை அளிக்கிறது.



இன்று, நாம் ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை அளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளோம். குறைந்த நோய் தொற்று வாய்ப்பு, அறுவை சிகிச்சை நிபுணருக்கும் எளிமையான முறை, ரோபோ சாதனங்களின் மேம்பட்ட திறன், நோயாளிகளுக்கும் விரைவான மீட்பு ஆகிய பல நன்மைகளால் இது சிறந்த அறுவை சிகிச்சை முறையாக திகழ்கிறது.



கோவிட் தொற்று நோயின் போது 'டெலிமெடிசின்’ சிறந்த முன்னேற்றத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாக தொலைதூர நோயாளிகளை கண்காணிக்கவும் உதவியாக இருந்தது. அருகில் இல்லாமலேயே ஒரு நோயாளியின் நிலையை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கவும் இது மிகவும் உதவுகிறது.



நவீன சிகிச்சை முறை



’ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மருத்துவ துறையில் பல பரிமாணங்களை கண்டுள்ளது. இதனை பயன்படுத்தி நோயாளிகளின் அதிக தரவுகள் மற்றும் பிற தகவல்களை மதிப்பிட்டு, நோயாளிகளின் தன்மையையும், சரியான சிகிச்சை தேர்வையும் எளிதில் கண்டறிய முடியும். ஓர் ஆண்டிற்கும் குறைவான காலத்தில் பல பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய அறிவியல் சாதனை. 



நானோமெடிசினில் மூலக்கூறு சிறியதாயினும் பயன்பாட்டு திறன் மிகவும் பெரியது. அதிநவீன தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய இயக்கிகளான ஏ.ஐ. , ஐ.ஓ.டி., மற்றும் பிக் டேட்டா ஆகியவை மருத்துவ துறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த தொழில்நுட்பம், மறைத்திருக்கும் புற்றுநோய்ச்செல்களை கண்டறிந்து, புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க பெரும் உதவியாக உள்ளது. 



மனிதன் மூளையை கணினியுடன் ஒருங்கிணைத்து நரம்பியல் குறித்த பொறியியல் ஆராய்ச்சிகளின் மூலம் செயற்கை கைகால்களை நகர்த்த ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இவ்வாறு தொடர்ந்து நவீன மாற்றங்களை கண்டுவரும் மருத்துவத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி வாய்ப்புகளையும் பிரகாசமாக்கி உள்ளதை இன்றைய மாணவர்கள் உணர்ந்து, தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.




-சீனிவாசன், வேந்தர், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us