வணிக மேலாண்மை படிப்புகள் | Kalvimalar - News

வணிக மேலாண்மை படிப்புகள்பிப்ரவரி 14,2024,10:35 IST

எழுத்தின் அளவு :

ஒரு நிறுவனத்தின் வணிக நிர்வாகத்தை திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல் மற்றும் இயக்குதல், சந்தைப்படுத்தல், நிதி,  தொழில்முனைவோர் மேம்பாடு உட்பட வணிக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நிர்வகிக்கும் செயல்முறையே வணிக மேலாண்மை.



எந்த ஒரு நிறுவனமும் சிறப்பாக செயல்பட இத்தகைய செயல்முறைகள் செவ்வனே நடைபெறுதல் அவசியம்.



திட்டமிடல்: நிறுவனத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. நிறுவனத்தின் நிலைமையை தற்போதைய நிலையிலிருந்து நல்ல நிலைக்கு முன்னேற்றுவதே மேலாண்மை திட்டமிடல் ஆகும். அதனை சரியான முறையில் முன்னெடுத்து சென்று குறித்த இலக்கை அடைய திட்ட மேலாளர்கள் அவசியம்.



பணியமர்த்தல்: பொருத்தமான பணியாளர்களை பொருத்தமான பணிகளில் பணியமர்த்துவது, அவர்களுக்கான ஊதிய உயர்வு, போன்ற செயல்கள் அனைத்தையும் செய்வது பணியமர்த்தல் மேலாண்மை.



ஒழுங்கமைத்தல்: நிலுவையில் உள்ள பணிகளைப் பட்டியலிட்டு, அவற்றை நிர்ணயிக்கப்பட்ட நேர அவகாசத்திற்குள் முடிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒழுங்கு மேலாண்மை பணி உதவுகிறது. 



குழு மேலாண்மை: ஒரு நிறுவனத்தின் முதன்மை பொறுப்பில் உள்ளவர்கள், தங்களுடன் பணியாற்றும் குழுவினரை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வதே குழு மேலாண்மை. அனைத்துப் பணிகளையும் சரியான நேரத்தில் முடித்து, நிறுவனத்தின் விதிமுறை மற்றும் சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதும் குழு மேலாண்மையின் பகுதியாகும். 



நிதி மேலாண்மை: செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் நிதிக் கொள்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும்  நிதிமேலாண்மை உதவுகிறது.



சந்தைப்படுத்துதல்: மார்க்கெட்டிங் துறையில் பிராண்ட் மேலாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் வல்லுநர்கள், சந்தை ஆய்வாளர் ஆகியோர் சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்கி, சந்தை ஆராய்ச்சி நடத்தி, வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.



சப்ளை செயின் மேலாண்மை: தயாரிப்பாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையேயான பாலத்தை கட்டமைத்து மேம்படுத்துவதே சப்ளை செயின் மேலாண்மை. இது லாஜிஸ்டிக்ஸ், கொள்முதல், சரக்கு மற்றும் டிஸ்ட்ரிபூஷன் சேனல்களை நிர்வகிக்கும் பணிகளை உள்ளடக்கியது.



இவ்வாறு ஒரு நிறுவனம் செயல்படுவதில் ஒவ்வொரு நிலையிலும் திறன்மிக்க பணியாளர்கள் மற்றும் மேலாளர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.



படிப்புகள்: இத்தகைய திறனாளர்களை உருவாக்க, இளநிலையில் பி.ஏ., பி.பி.ஏ., பிஎம்.எஸ்., பி.காம்., பி.பி.எஸ்., பி.ஆர்.எம்., பி.இ.எம்., முதுநிலையில் எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., இ.எம்.பி.ஏ., உட்பட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us