ஆஸ்திரேலியாவில் படிக்கலாம் வாங்க! | Kalvimalar - News

ஆஸ்திரேலியாவில் படிக்கலாம் வாங்க!டிசம்பர் 19,2021,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய-ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே பாரம்பரியமிக்க மற்றும் வலிமையான உறவுகள் உள்ள நிலையில், இரு நாட்டு மாணவர்களுக்குமான கல்வி வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன.



பரஸ்பர உறவுமுறை:


ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். திறமைவாய்ந்த மிகுதியான மாணவர்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், இருநாட்டு பொருளாதாரத்திலும் மாணவர்களது பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது. இரு நாட்டு பல்கலைக்கழகங்களும் முன்வந்து பரஸ்பரம் தங்களது உறவுகளை விரிவுபடுத்திக்கொண்டு கல்வி பரிமாற்றத்தில் ஈடுபடுவதால், மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை அளித்து வருகின்றன. 



இதன்வாயிலாக, தொழில்துறை சார்ந்த புராஜெக்ட்களில் இந்திய மாணவர்கள் சிறப்பாக பங்காற்றி வருகின்றனர். அதேபோல், ஆஸ்திரேலியா மாணவர்களும் இந்திய நிறுவனங்களில் தங்களது அனுபவத்தை விரிவுபடுத்திக்கொள்ள முடிகிறது. ஆராய்ச்சி, உயர்கல்வியில் இரு நாட்டு கல்வி நிறுவனங்களும் மிகவும் சிறந்து விளங்குவதோடு, ஒருங்கிணைந்தும் செயலாற்றி வருகின்றன.



பாதுகாப்பு: 


கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச மாணவர்களின் வருகை பாதிக்கப்பட்டாலும், தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. பெருந்தொற்று பரவலை ஆஸ்திரேலியா மிகவும் கவனமாக கையாண்டு வருவதால், சர்வதேச மாணவர்கள் எந்தவித அச்சமும், தயக்கமுமின்றி தற்போது தங்களது கல்வியை திட்டமிடலாம். ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்களும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தரமான கல்வியை வழங்க நிதி உதவியையும் அளித்து வருகின்றன. 



உதவித்தொகை:


இந்திய மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை ஆஸ்திரேலியா அரசாங்கமும், பல்கலைக்கழங்களும் வழங்குகின்றன. இவை குறித்த விரிவான விபரங்களை https://www.studyaustralia.gov.au/india எனும் இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.



மேலும், படிப்பை தேர்வு செய்தல், ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்களை தேர்வு செய்தல் மற்றும் கண்டறிதல், மாணவர் சேர்க்கை நடைமுறைகள், விசா வழிமுறைகள் ஆகிய தகவல்கள் குறித்தும் இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். குறிப்பாக, முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தயாராவது மிகவும் சரியானதாக அமையும்.



ஆஸ்திரேலியா ஏன்?


உலகத்தரம் வாய்ந்த கல்வித்தரத்தையும், தரமான கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் படிப்பது அலாதியானது. சிறந்த 100 சர்வதேச கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அவற்றில் 41 ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மிகவும் பாதுகாப்பான, அழகான, துடிப்பான நாடுகளில் ஆஸ்திரேலியாவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. வேலைவாய்ப்பு மிகுந்த திறன் மிக்கவர்களாக இந்திய மாணவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. அதற்கு ஏற்ப, ஆஸ்திரேலிய அரசாங்கமும், வெற்றிகரமாக கல்வியை முடித்த சர்வதேச மாணவர்கள், அங்கேயே வேலை வாய்ப்பை பெற ஏதுவாக ’போஸ்ட் ஸ்டடி’ விசா வழங்குகின்றன.



-டாக்டர். மோனிகா கென்னடி, சீனியர் டிரேட் அண்டு இவெஸ்ட்மெண்ட் கமிஷன், ஆஸ்டிரேட் 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us