பெற்றோர்களே நல்ல நண்பர்களாக இருங்கள் | Kalvimalar - News

பெற்றோர்களே நல்ல நண்பர்களாக இருங்கள்

எழுத்தின் அளவு :

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை கையாள்வது எப்படி தெரியுமா? 
தன் குழந்தையை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பது அனைத்து பெற்றோர்களிடத்தில் உள்ள இயற்கையான குணம் தான். சில பெற்றோர்கள் அதையே மனதில் வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஆர்வம், திறமை என்ன என்று புரிந்து கொள்ளாமல் அதை செய், இதை செய் என்று திணிக்கின்றனர்.

குழந்தைகளின் இயல்பு என்னவென்று முழுவதும் அறிந்த கொண்டு செயல்படுத்தினால் மட்டுமே குழந்தைகளை சரியான வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் அவசரத்தில் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றனர்.

அதனாலேயே பல குழந்தைகள் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். தன் எண்ணங்களையும், ஆசைகளையும் மனம்விட்டு பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நம்பிக்கையான நண்பனை தேர்ந்தெடுக்கின்றனர்.

பெரும்பாலும் இளம்வயது பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது தன் நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தனக்கு நேர்ந்த சுவாரசிய நிகழ்சிகளையும், ஆலோசனைகளையும் நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதை பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டு எப்பொழுது பார்த்தாலும் போன் போன். என்ன தான் பேசுவியோ? என்று திட்டி தீர்பார்கள். அவ்வாறு நேரும் போது குழந்தைகள் பெற்றோர்கள் எப்பொழுதும் திட்டுகின்றனர் என பெற்றோருக்கு தெரியாமல் போனில் பேசுவார்கள்.

இதுவும் பெற்றோருக்கு பல்வேறு சந்தேகங்களை உண்டு பண்ணும். பெற்றோர் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்வதும், நண்பர்களுடன் மனம் விட்டு பேசாமல் இருப்பதாலும்  சில பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்  படுவதோடு மட்டுமல்லாமல் ஒருவித மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுவிடுவர். பின் அவர்களை அதிலிருந்து மீட்க முடியால் பெற்றோர்கள் தடுமாறுகின்றனர்.

எனவே உங்கள் பிள்ளையின் நண்பர்களை அவ்வப்போது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் நீங்களும் பேசுங்கள். அரட்டை அடியுங்கள். அவர்களின் குண நலன்களை தெரிந்து கொண்டு நல்ல நண்பர்களுடனான நட்பை ஆதரியுங்கள்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் பெரும்பாலும் தன் நேரத்தை தேவையில்லாமல் பல வழிகளில் செலவிடுகின்றனர். உங்கள் வேலைகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி விட்டு பிள்ளைகளுக்காக செலவிடலாம், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசலாம், அவர்களின் தேவை  என்ன? அதை எவ்வாறு  பூர்த்தி செய்யலாம் என்று யோசிக்கலாம். உங்களது அனுபவங்களை பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதால் அவர்களுக்கு  தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். அவர்களது அன்றாட நடவடிக்கைகளை உங்களிடம் பெற்றோர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் தோன்றும்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை அணைக்கும் நேரத்தில் அணைத்து, கண்டிக்கும் நேரத்தில் கண்டித்து செயல்படுத்துங்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள், நாளைய  பிள்ளைகளின் எதிக்காலம் உங்கள் கையில்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us