‘தன்னம்பிக்கை மிக அவிசியம்’ | Kalvimalar - News

‘தன்னம்பிக்கை மிக அவிசியம்’

எழுத்தின் அளவு :

எஸ்.எம்.கே. போம்ரா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் உஷா ஈஸ்வரன் அளித்த பேட்டி:

கல்வி கற்கும் மாணவர்களை படிப்பில் மட்டும் சிறந்தவர்களாக உருவாக்காமல் நல்ல குடிமகனாகவும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். மாணவிகளுக்கு கல்லூரியிலும், எதிர்காலத்தில் வேலை பார்க்கும் இடத்திலும் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாணவரின் நிலையில் இருந்து பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுப்பது மாணவருக்கு புரிந்தால்தான் ஆசிரியருக்கு வெற்றி. மாணவர்களும் பாடத்தின் கருத்தினை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தெரியாத தகவலை தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி கற்றுக்கொடுக்கும்பொழுது எளிதில் புரிய வைக்க முடியும். மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவர்களை திறனுள்ளவர்களாக மாற்றுவதற்காக சிறு சிறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கம் அளிக்கிறோம். இதன் மூலமாக கண்டுபிடிப்புகளோடு, சுய தொழில் செய்வதற்கான ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள். கண்டுபிடிப்புகள் சமூகத்திற்கு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்.

தொழிலகங்களுக்கும், வகுப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க முயற்சிக்கிறோம். மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் மனக் கவலைகளை நீக்கி, உற்சாகமிக்கவர்களாக மாற்றுவதில் முன்னிலை வகிக்கிறோம். அதனோடு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதில் மாணவர்களை பங்கெடுக்க வைத்து, பல்துறை சார்ந்த அறிவினை பெற்றுக்கொள்ள வைக்கிறோம்.

மாணவர்களை இளம் வயதிலேயே சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். வாழ்க்கையை மனித உணர்வுகளோடு வாழ வேண்டும். மதிப்பெண்ணைவிட திறமை அவசியம் என்பதை பெற்றோரும், மாணவரும் உணர வேண்டும். பொறியியலின் வெற்றியானது தனிப்பட்ட மாணவரின் திறமையைப் பொறுத்தே அமையும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் சிறந்த கல்வி மட்டும் போதாது; தன்னம்பிக்கை மிக அவசியம். எனவே மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கை பெற உரிய பயிற்சி அளிக்கிறோம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us