வணிகம் மற்றும் கணக்குப் பதிவியலை மட்டும் கற்பிக்கும் பி.காம். இளநிலை பட்டப்படிப்பிற்கு சற்று மாறுதலாக டேக்ஸேஷன் படிப்பு அமைந்துள்ளது. வரி பிடித்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இப்படிப்பு வழங்குகிறது. வருமான வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி சொத்து வரி, வரி தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகள் குறித்து இந்த மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
வரித்துறையில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் தற்போது இப்படிப்பின் மீது மாணவர்களுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றுவதற்கான அனைத்து தகுதிகளையும் இப்படிப்பின் மூலம் மாணவர்கள் பெற இயலும்.
கணிதவியல், வணிகவியல், பொருளாதாரம் அல்லது கணிதம் எடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கொண்டு மேல்படிப்பு படிக்க விரும்புபவர்கள், எம்.காம்., எம்.பி.ஏ., சி.ஏ., சி.எப்.ஏ. சி.எஸ். ஆகிய முதுகலை பட்டப்படிப்பு படிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
அண்ணாமலை பல்கலைக்கழகம்-சென்னை, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்-வாரணாசி, ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை இப்படிப்பை வழங்குகின்றன.
வேலை வாய்ப்பு
ஆடிட்டிங், அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட், அக்கவுன்டன்ட், பட்ஜெட் அனலிஸ்ட், காஸ்ட் அக்கவுன்டிங், வரி ஆலோசகர், டேக்ஸ் அசிஸ்டென்ட், டேக்ஸ் மேனேஜர் என பெரிய தனியார் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.