கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதைவிட, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில் இப்படிப்பை பல மாணவர்கள் தங்களது முதல் விருப்பமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அண்மைக் காலத்தில் எந்தப் இன்ஜினியரிங் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில்தான் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பது வெளிப்படை. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் இன்ஜினியரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
டெலி கம்யூனிகேஷன் மற்றும் கம்யூனிகேஷன் தொழில் நிறுவனங்கள், சாப்ட்வேர், ஹார்டுவேர் நிறுவனங்கள், மைக்ரோபுராசசர் நிறுவனங்கள், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
நான்கு ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் பட்டப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளிலும் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம்.