மருத்துவம் சார்ந்த படிப்பில் கிளினிகல் பெர்பியூஷனிஸ்ட்டும் ஒன்று. இதய அறுவை சிகிச்சையின் போது மயக்கவியல் வல்லுனர்களுக்கும், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இவர்கள் உதவுகின்றனர். அறுவை சிகிச்சையின் போது உடலின் ரத்த ஓட்டம், நின்றுவிடாமல் இருக்க இவர்கள் கண்காணிக்கின்றனர்.
திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையின் போது இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாது. அதற்கு மாற்றாக தற்காலிமான கருவி நோயாளிக்கு பொருத்தப்படும். இதை பொறுத்தி, இயக்க வேண்டியது கிளினிக்கல் பெர்பியூஷனிஸ்ட் டெக்னாலஜிஸ்ட்டின் வேலை. இது தவிர நோயாளியின் உடலில் ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைட் அளவை சீராக பாரமரிப்பது, ரத்த ஓட்டத்தை, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்காணிப்பதும் இவர்களது பொறுப்பு.
அறுவை சிகிச்சையின் போதே நோயாளிகளுக்கு மருந்து செலுத்த இவர்கள் உதவுகின்றனர். இவ்வாறான பணிகளை மேற்கொள்ள இவர்கள் மனித உடலின் ரத்த ஓட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியதும், சிக்கலான கருவிகளை கையாள தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
வேலை வாய்ப்பு:
இந்த படிப்பை முடித்த மாணவர்கள் பெரிய மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். அல்லது கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவோ, ஆராய்ச்சியாளராகவோ பணியாற்றலாம். மருத்துவமனைகளில் பெர்பியூஷன் குழுவை வழிநடத்த வேண்டியது தலைமை பெர்பியூஷனிஸ்ட் பொறுப்பு. மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த கிளினிக்கல் பெர்பியூஷனிஸ்ட் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது. இது ஒரு சவாலான துறை என்பதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை, பி.எஸ்.சி., படிப்பாக பெர்பியூசன் டெக்னாலஜியை வழங்குகிறது. பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் படித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியும். பி.எஸ்.சி., இயற்பியல் படித்த மாணவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரலாம்.