காலணிகள் அத்தியாவசிய தேவை. காலணி தொழில்நுட்பத்துக்கு எதிர்காலத்திலும் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. இதற்கென வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களையும், பயிற்சி பெற்ற நபர்களையும் கொண்ட மிக நவீனமான ஒரு துறையாக காலணி தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
எனினும் கடும் உழைப்பு தேவைப்படும் துறை இது. இந்த தொழிலில் சேர விரும்புபவர்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். உயர் தொழில்நுட்பத்தை கையாள வேண்டியிருக்கும் என்பதால், அறிவியல் மற்றும் இயந்திரங்கள் குறித்த அறிவு மேனேஜர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் அவசியம்.
வடிவமைப்பாளர்களுக்கு கற்பனைத்திறனும், புதியவற்றை உருவாக்கும் படைப்புத்திறனும் தேவை. காலணி தொழில் நுட்பத்தில் டிப்ளமோ முடித்த அறிவியல் பட்டதாரிகளுக்கு எக்சிகியூட்டிவ் அளவிலான பணிகள் கிடைக்கும். பிற பட்டதாரிகளுக்கு வடிவமைப்பாளர்களாக வேலைவாய்ப்பு உள்ளது.
நொய்டாவிலும், சென்னையிலும் உள்ள புட்வேர் டிசைன் அண்டு டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட், சென்னை புட்வேர் டிரைனிங் சென்டர் அல்லது சென்னை ரிசர்ச் பார் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற ஒரு சில கல்விநிறுவனங்களில் புட்வேர் டெக்னாலஜி இளநிலை படிப்பாக உள்ளது. முதுநிலை அளவில் புட்வேர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்கை தேர்வு செய்து படிக்க முடியும்.
காலணி தொழில்நுட்பத்தில், மனித வள மேம்பாட்டு பிரிவை தேர்வு செய்தும் படிக்க முடியும். இந்த 18 மாத டிப்ளமோ படிப்பில் சேர மெக்கானிக்கல் அல்லது புரடக்ஷன் இன்ஜினியரிங்கில் பி.இ., அல்லது பி.டெக்., நிறைவு செய்திருக்க வேண்டும். லெதர் டெக்னாலஜியில் இளநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும், இயற்பியல் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலை படிப்பை நிறைவு செய்தவர்களும் கூட இதில் சேரலாம்.
காலணி தொழில்நுட்பத்தில் மேற்பார்வையாளராக பணியாற்ற தனியான படிப்பு உள்ளது. இதில் அறிவியல் பட்டதாரிகள் சேர முடியும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது தோல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்தவர்களும் இதில் சேரலாம். வடிவமைப்புக்கும் ‘டிப்ளமோ இன் புட்வேர் டிசைனிங்’ என்ற படிப்பு உள்ளது. நுண்கலையில் பட்டம் பெற்றவர்களோ, அல்லது வரைதல், வடிவமைத்தல் போன்றவற்றில் ஈடுபாடுள்ள பட்டதாரிகளும் இதில் சேர முடியும்.